லண்டன்:

ந்திய வங்கிகளில்  ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக இந்தியாவின்  பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இந்தக் கடன்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விஜய்மல்லையாவோ,  கடனை திருப்பிச் செலுத்தாமல்  பிரிட்டனுக்கு தப்பி ஓடினார். தற்போது அந்நாட்டு தலைநகர் லண்டனில் ஆடம்பரமாக வசித்து வருகிறார்.

இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினராகவும் இருந்தார். லண்டனில் இருந்தபடியே தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

அங்கிருந்தபடியே தனது ட்விட்டர் பக்கத்தில் பலவித விசயங்கள் குறித்து எழுதுகிறார். கிரிக்கெட் போட்டிகளை தனது மகனுன் பார்த்து ரசிக்கும் படங்களையும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் இந்தியாவில் வங்கிகள் சார்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகள் நடந்துவருகின்றன. விஜய்மல்லயாவுக்கு  ஜாமினில் வரமுடியாத பிடிவாரண்ட் நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டது. அவரது பாஸ்போர்ட்டையும் நீதிமன்றம் முடக்கியது.

அவரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து,  இந்திய வெளியுறவுத்துறை, பிரிட்டன் தூதரிடம் பேசியது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கோபால்பாக்லே செய்தியாளர்களிடம், “விஜய்மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை  பிரிட்டன் உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது என்று கடந்த 21-ம் தேதி எங்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டு உள்துறை அமைச்சகம் மூலம், மல்லையா வசிக்கும் வெஸ்ட்மினிஸ்டர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற நீதிபதிக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இந்தியா- பிரிட்டன் இடையே கைதிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் தொடர்பாக பிரிட்டன் தூதரிடம் கடந்த மாதம் 8-ம் தேதி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முறைப்படி கோரிக்கை மனுவை அளித்தது.

இதையடுத்து மல்லையாவை நாடுகடத்தும் பணி தொடங்கி இருக்கிறது” என்று தெரிவித்தார்.