சவூதி:
சவூதியில் பணியாற்றும் பிரிட்டன் தூதர் சைமன் கொலிஷ் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். இதையடுத்து அவர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
இஸ்லாமியர்கள் தனது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் செல்ல வேண்டும் என்பது அவர்களது கடமை.
அதுபோல, இஸ்லாம் மதத்துக்கு மாறிய பிரிட்டிஷ் தூதர் சைமன் கொலிஷும் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர் அணியும் பாரம்பரிய உடையான வெள்ளை உடை அணிந்து தனது மனைவியுடன் அவர் ஹஜ்ஜில் இருந்த படம் நேற்று வெளியானது.
இந்த படம் சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து வெளியாகி உள்ளது என்றும், ஒரு ஆன்லைன் பத்திரிகை மூலம் வெளியாகி உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஹஜ் பயணம் மேற்கொண்ட முதல் பிரிட்டிஷ் தூதர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சைமன் கொலிஷ் ஏற்கனவே சிரியா மற்றும் பஹ்ரைன் நாடுகளில் பிரிட்டனின் தூதராக பணியாற்றி உள்ளார். அப்போது சிரியாவை சேர்ந்த ஹுடா அல் முஜார்கெக் என்ற இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறினார்.
2012ல் நடைபெற்ற சிரிய உள்நோட்டு போரின்போது, சிரியா ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தால் கொலிஷ் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு சவூதியில் பிரிட்டிஷ் தூதராக பணியாற்றினார்.
சைமன் கொலிஷ் ஏற்கனவே துனிசியா, இந்தியா, ஏமன் மற்றும் எமிரேட்டில் பல பதவிகளில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.