லண்டன்: கடந்த 1882ம் ஆண்டிலிருந்து முதன்முறையாக நிலக்கரியை எரிக்காமல், முழுவதும் ஒரு வார காலம், பிரிட்டனின் மின்சார தேவை சமாளிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சாதனைப் படிக்கல்லாக கருதப்படுகிறது.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பிரிட்டன் மின்சார தேவையில் நிலக்கரி என்பது எப்போதுமே முக்கியப் பங்கு வகித்து வருகிறது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத மின் உற்பத்தியை நோக்கிய அந்நாட்டின் பயணத்தில், சில தொடர்ச்சியான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன.
அதனடிப்படையில், தற்போது ஒரு சிறியளவிலான வெற்றி கிடைத்துள்ளது. அதற்காக இனிமேல் மின்சாரத்திற்கு நிலக்கரி ஆற்றலே பயன்படுத்தப்படாது என்பதல்ல. அதிகளவு மின்சாரம் தேவைப்படும் சமயங்களில் நிலக்கரியின் துணை அவசியம்.
கடந்த மே 1ம் தேதி, மின் ஆற்றல் அமைப்பிலிருந்து கடைசி நிலக்கரி மின்னாக்கி நீக்கப்பட்டதிலிருந்து, மே 8ம் தேதி பிற்பகல் 1.24 மணிவரையான நிலவரப்படி சரியாக 1 வார காலத்திற்கான மின்சார தேவை முழுமையாகப் பூர்த்தியானது நிலக்கரியின் துணையில்லாமல்.