ண்டன்

விவசாயிகள் போராட்டம் குறித்து இந்திய அரசிடம் பிரிட்டன் அரசு குரல் எழுப்பக் கோரி 36 பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள வேளான் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கும் உள்ள விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.   இந்த போராட்டத்துக்கு இந்தியாவில் மட்டுமின்றி பல உலக நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது.   இந்த போராட்டத்தை ஆதரித்து ஏற்கனவே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்திருந்தார்.   இந்நிலையில் தற்போது பிரிட்டனில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு எழுந்துள்ளது.

இந்த கடிதம் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தன்மஞ்சீத் சிங் தேசியின் ஒருங்கிணைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில், ”பிரிட்டிஷ் வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப்பை சந்திக்க எங்களுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்..இந்த பிரச்சினை குறித்து  இந்திய அரசிடம் டொமினிக் பேச வேண்டும்.

இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்களுக்கும் பஞ்சாபுடன் தொடர்புள்ளவர்களுக்கும் கவலையளிக்கும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கிறது.  சமீபத்தில் இந்திய அரசு கொண்டுவந்துள்ள 3 விவசாய சட்டங்கள்தான் இதற்குக் காரணம் ஆகும்.   இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம், பெரிதும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பிரிட்டனில் உள்ள சீக்கியர்களும், பஞ்சாபியர்களும், தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், இந்த பிரச்சினை குறித்து பேசி உள்ளனர். அவர்கள் பஞ்சாபில் உள்ள தங்கள் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் பரம்பரை விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார்கள்.” எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த கடிதத்தில் கையொப்பமிட்ட ஜெர்மி கோர்பின், வீரேந்திர சர்மா, சீமா மல்ஹோத்ரா, வலேரி வாஸ், நாடியா விட்டோம், பீட்டர் பாட்டம்லி, ஜான் மெக்டோனல், மார்ட்டின் டோச்செர்டி-ஹியூஸ் மற்றும் அலிசன் தெவ்லிஸ் ஆகியோர் தொழிலாளர் கட்சி, கன்சர்வேடிவ் மற்றும் ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.