லண்டன்
ஐரோப்பிய நாடுகள் குழுவில் இருந்து இன்னும் விலகாமல் உள்ள நிலையில் அந்த முத்திரை இல்லாமல் பிரிட்டன் அரசு பாஸ்போர்ட்டுகள் வழங்க தொடங்கி உள்ளன.
பிரெக்சிட் என்பது ஐரோப்பிய நாடுகள் குழுவில் இருந்து பிரிட்டன் வெளியேறும் ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் சென்ற மாதம் 29 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அதன்பிறகு ஐரோப்பிய நாடுகள் குழுவில் பிரிட்டன் இடம் பெறாது எனவும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்தார். இந்த தீர்மானம் பிரிட்டன் மக்களிடையே நடந்த வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.
ஆயினும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் இரு அவைகளிலும் தோல்வி அடைந்தது. எனவே பிரெக்சிட் ஒப்பந்தம் ஜூன் 30 வரை தள்ளிப் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமுலுக்கு வரும் வரை சட்டப்படி பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகள் குழுவை சேர்ந்தது எனவே கருதப்படும். ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகள் குழு என்னும் முத்திரை இல்லாமல் பிரிட்டன் அரசு பாஸ்போர்ட்டுக்கள் வழங்க தொடங்கி உள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் தேதி வரை வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகளில் மேலே ஐரோப்பிய நாடுகள் குழு எனவும் அதே பெயரில் முத்திரைகளும் இருந்தது. தற்போது அந்த முத்திரை யுனைடெட் கிங்டம் ஆஃப் கிரேட் பிரிட்டன் மற்றும் நார்த் அயர்லாந்து என மாற்றப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் குழு என்னும் பெயரில் உள்ள பாஸ்போர்ட்டுகள் இருப்பு தீரும்வரை வழங்கப்படும் எனவும் அதன் பிறகு அந்த பெயரும் மாற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாஸ்போர்ட்டுக்களின் மேல் அட்டையில் இந்த இரு பெயர்களில் எது இருந்தாலும் பிரிட்டன் குடிமக்களால் பயணம் செய்ய முடியும் வகையில் இந்த பாஸ்போர்ட்டுகள் அமைக்கபட்டுள்ளன. எனவே இந்த பெயர் மாற்றம் குறித்து மக்கள் கவலை கொள்ள வேண்டாம்” என அறிவித்துள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுக்கா உம்முனா, “இது ஒரு முட்டாள் தனமான நடவடிக்கை ஆகும். இது நமது நாட்டையும் அரசையும் உலக அரங்கில் சிறுமைப்படுத்தும் செயலாகும். இந்த செய்கை மூலம் நாம் மற்ற நாடுகளை மதிக்காமல் கேவலப் படுத்துகிறோம் என உலக நாடுகள் நினைக்கும்” என தெரிவித்துள்ளார்.