சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படவில்லை.

இந் நிலையில், அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான அரசுக்கு, கூட்டணி கட்சியான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவருமான துஷ்யந்த சவுதாலா சில வாரங்களாக நெருக்கடி கொடுத்து வருகிறார். அதன் காரணமாக கூட்டணியில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந் நிலையில், இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளதாவது: முதல்வர் மனோகர் லால் கட்டார், கர்னாலில் நடந்த சம்பவத்தை எதிர்கொள்வதற்கு பதிலாக, புதிய விவசாய சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

மக்களை தூண்டும் எந்த செயலையும் மத்திய, மாநில அரசுகள் செய்யக் கூடாது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் அமைதியாக நடக்கிறது. முதல்வர் மனோகர் லால் கட்டார் அரசுக்கு எதிராக, சட்ட சபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றார்.