டெல்லி: நாட்டில் மேலும் 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அரியானா, இமாச்சலப்பிரசேதம், கேரளா உள்பட 10 மாநிலங்களில் கடந்த சில நாள்களாக பறவை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான பறவைகள் உயிரிழந்து வருகின்றன.

புலம்பெயர் பறவைகளால் நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இந்த தொற்று பரவி வருகிறது. அதை தடுக்கும் வகையில் உயிரிழந்த பறவைகள் கண்டெடுக்கும் சுற்றுப் புறத்தில் உள்ள அனைத்து பறவைகளையும் அழித்து வருகின்றனர்.

தற்போது புதிதாக 5 மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

நாட்டில் 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று புதியதாக ஜம்மு – காஷ்மீரில் ஒரு மாவட்டத்திலும், ஜார்கண்டில் 4 மாவட்டங்களிலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலும், பறவை காய்ச்சல் தொடர்பாக பரவும் வதந்திகளை தவிர்க்க, கோழி மற்றும் முட்டைகளை உட்கொள்வது குறித்து மாநிலங்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து மக்களுக்கு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.