மும்பை

தெற்கு மும்பையில் நேற்று இடிந்து விழுந்து 6 பேரை கொன்ற நடை மேம்பாலம் பாதுகாப்பானது என சான்றிதழ் பெறப்பட்டது என தெரிய வந்துள்ளது.

மும்பை நகரில் கடந்த 2017 ஆம் வருடம் எஸ்பிளனேட் நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது.   அதை ஒட்டி மும்பை மாநகராட்சி நகரில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.   அதன்படி அனைத்து பாலங்களும் ஆய்வு செய்யப்பட்டு அதன் பாதுகாப்பு குறித்து அறிக்கை அளிக்கப்பட்டது.

அவ்வாறு ஆய்வு செய்யப்பட்ட பாலங்களில் இமாலயா நடை மேம்பாலமும் ஒன்றாகும்.  தெற்கு மும்பையில் அமைந்துள்ள இந்த மேம்பாலம் கேசப் பாலம் எனவும் அழைக்கப்படுகிறது.   கடந்த 1988 ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த பாலத்தில் தரையில் உள்ள டைல்கள் கடந்த 2016 ஆம் வருடம் மாற்றப்பட்டது.   இந்த பாலம் பாதுகாப்பானது எனவும் சிறு பழுதுகள் மட்டும் உள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஒட்டி மும்பை மாநகராட்சி இந்த பாலத்தில் உள்ள சிறு பழுதுகளை சரிபார்க்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரியது.   அதில் ஒரு ஒப்பந்ததாரர் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிகளுக்கான உத்தரவு அளிக்கபட உள்ளது.   மக்களவை தேர்தல் காரணமாக இந்த பணி உத்தரவு தேர்தலுக்கு பிறகு வழங்க உள்ளது.

இந்நிலையில் இந்த இமாயலயா நடை மேம்பாலம் நேற்று பலரும் சென்றுக் கொண்டிருந்த நேரத்தில் திடீர் என இடிந்து விழுந்தது.   இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.   இது மும்பை நகர மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.   மும்பை மாநகராட்சி அதிகாரிகள் இந்த ஆய்வறிக்கை மீது சந்தேகம் கொண்டுள்ளனர்.

இது குறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மாநகராட்சி அதிகாரி ஒருவர், “இந்த ஆய்வு நடத்திய நிறுவனம் மீது தற்போது மிகவும் சந்தேகம் எழுந்துள்ளது.  ஆய்வறிக்கையில் சிறிய பழுதுகள் மட்டும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால் பாலம் முழுமையாக இடிந்து விழுந்துள்ளது.    ஆய்வு நிறுவனத்தின் மீது மாநகராட்சி நடவடிக்கை எடுக்க உள்ளது” என தெரிவித்துள்ளார்.