மதுரை: “பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக் கூடாது என்று நான் எண்ணியதால் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தினேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்றாம்  வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. இஅண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை மாநகராட்சி ஆதிமூலம் தொடக்கப் பள்ளியில் இன்று காலை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து, பள்ளிக் குழந்தைகளுடன் அமர்ந்து தானும் உணவு உட்கொண்டார். அப்போது அருகே இருந்த குழந்தைகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார்.

முன்னதாக, மதுரை, நெல்பேட்டையில், 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் மைய சமையல் கூடத்தை முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்தது, பள்ளிகளுக்கு காலை உணவு எடுத்துச் செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று நான் எண்ணியதால் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன் என்றும், “பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டிகளாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணை வடிவமான திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம்” என கூறியதுடன்,  ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வு காண வேண்டும் என்ற முயற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆதிமூலம் பள்ளியில் இருந்து காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது” என  தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்அன்பில் மகேஸ், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜவீன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி, ஆட்சியர் அனீஸ் சேகர், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜீத் சிங் மற்றும் எம்எல்ஏ-க்கள், அரசுத் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

காலை உணவு திட்டம் தொடக்க விழா நிகழ்ச்சி குறித்து, திமூலம் மாநகராட்சி பள்ளி குறிப்பேட்டில் எழுதிய முதலமைச்சர், திராவிட மாடல் ஆட்சியாக செயல்படும் நமது ஆட்சியில் இன்று தொடங்கியுள்ள முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்” என  குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,  என் வாழ்வின் பொன்னான நாளாக இந்த நாள் அமைந்துள்ளது.   ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளின் ஆதிமூலத்தை கண்டறிவதற் காக இந்த ஆதிமூலம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.சென்னையில் ஆய்வின் போது மாணவர்களை சந்தித்து கேட்டபோது ஏராளமான குழந்தைகள் பசியோடு காலையில் பள்ளிக்கு வருவதை உணர்ந்து இத்திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன்.

பசித்த வயிற்றுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டிகளாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் கருணை வடிவமான திட்டம்தான் காலை உணவு வழங்கும் திட்டம். பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு பசியோடு பாடம் சொல்லிக் கொடுக்கக்கூடாது என்று நான் எண்ணியதால் இந்த திட்டத்தை செயல்படுத்தினேன். இத்திட்டத்தை சலுகை, இலவசம் என எண்ணக்கூடாது . இது அரசின் கடமை.  பசிப்பிணி நீங்கினால் மாணவர்கள் மகிழ்ச்சியோடு வருவார்கள்.  இதனால் கல்வி மேம்படும். இதற்கான நிதியை செலவாக நினைக்கவில்லை.  இத்திட்டத்தை ஆட்சியின் முகமாக பார்க்கிறேன். கலைஞரின் மகனின் அரசு கருணையின் வடிவான அரசு.  தாயுள்ளத்தோடு இத்திட்டத்தை பின்பற்ற வேண்டும்.  ஆசிரியர்கள் , பணியாளர்கள் உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உணவு வழங்குவது போல பாசத்தோடு உணவுகளை வழங்குங்கள்.

கல்வி போராடிப் பெற்ற உரிமை . கல்வி உங்களிடம் இருந்து பறிக்க முடியாத சொத்து என்று உணர்ந்து  நன்கு படிக்க வேண்டும் . நன்கு படியுங்கள்.  படிக்காமல் முன்னேறலாம் என்று கூறுபவர்களை முட்டாள் என கூறுங்கள்.  நீங்கள் படியுங்கள் நான் இருக்கிறேன். பசிப்பிணி போக்க எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன்  என்றார்.