மதுரை:
காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.

தமிழக அரசு பள்ளிகளில் ஏற்கனவே மதியஉணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், திமுக அரசு பதவி ஏற்றதும், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின்படி, 1,545பள்ளிகளில் படிக்கும் 1,14,095 மாணவ-மாணவி களுக்கு காலை உணவு வழங்க தமிழக அரசு, ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி பரிசார்த்த முறையில் சில பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி உள்ள நிலையில், அடுத்தக் கட்டமாக, சென்னை மாநகராட்சியில் 36 பள்ளிகளில் 5,941 மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆண்டுக்கு ரூ.1.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கி உள்ளது.

காலை சிற்றுண்டி திட்டத்தின்படி, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்க, 6 இடங்களில் காலை உணவை தயாரித்து வழங்குவதற்கு உகந்த இடம் ஆய்வு செய்யப்படுகிறது. காலை சிற்றுண்டி திட்டம் மாநகராட்சி மண்டலம் 1 முதல் 5வரையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு மட்டுமே முதல் கட்டமாக வழங்கப்பட உள்ளது. அதனால் வட சென்னை பகுதியில் உள்ள இந்த மண்டலங்களில் சமையல் கூடம் அமைக்கப்படுகிறது. அங்கிருந்து காலை சிற்றுண்டி தயாரித்து 36 பள்ளிகளுக்கும் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து, காலை 8 மணி அளவில் அருகில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.