ஐ.நா. சபை கூட்டம் அமெரிக்காவில் இன்று முதல் நடைபெறவிருக்கிறது.
193 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க இருக்கின்றனர்.
கொரோனா அச்சம் காரணமாக சில தலைவர்கள் காணொலி மூலம் பங்கேற்கும் நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதில் கலந்துகொள்ள 23 ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
இந்நிலையில் பிரேசில் அதிபர் ஜயர் போல்சனாரோ இந்த கூட்டத்தில் இன்று பேச இருப்பதால் இவர் நேற்றே நியூயார்க் நகருக்கு வந்துவிட்டார்.
தடுப்பூசி போட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க எந்த தடையும் இல்லை என்ற போதும் நியூயார்க் நகரில் உள்ள உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடுப்பூசி போட்டிருக்க வேண்டியது அவசியம்.
இதனால் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிரேசில் அதிபர் போல்சனாரோ அங்குள்ள நடைபாதைக் கடையில் பிட்சா சாப்பிட வேண்டியதாகி விட்டது.
நேற்று அங்குள்ள நடைபாதை கடையொன்றில் தனது அமைச்சரவை சகாக்களுடன் பிட்சா சாப்பிட்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த நியூயார்க் நகர மேயர் பிளேசியோ, பிரேசில் அதிபர் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தினார்.