மைசூரு: குழந்தை திருமணத்தை எதிர்த்து வீட்டைவிட்டு தைரியமாக வெளியேறிய சிறுமி ஒருவர், இன்று தனது பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக நிறைவுசெய்து, தனக்கான எதிர்கால இலக்கை தெளிவாக வரையறுத்துள்ளார்.
தற்போது தனது 18வது வயதிலிருக்கும் ரேகா என்ற பெண், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், தனது ஏழைக் குடும்பத்தில், குடும்ப உறுப்பினர்கள் திருமணம் செய்ய வலியுறுத்தியதால், பத்தாம் வகுப்பை முடித்த கையோடு வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூரு வந்தடைந்தார்.
பின்னர், ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். அதோடு நில்லாமல், 1098 என்ற எண்ணில், குழந்தை உதவி மையத்தை தொடர்புகொண்டு, தனது மேற்படிப்பிற்காக உதவி கேட்டார். அவர்கள், அப்பெண்ணை ஸ்பார்ஷா டிரஸ்டிற்கு அழைத்துச் சென்று, அரசு பியு கல்லூரியில், மேல்நிலைப் பள்ளிப் படிப்பில் சேர்த்தார்கள்.
இரண்டாண்டு படிப்பிற்கு பின், தற்போது 90.3% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். வரலாற்றுப் பாடத்தில் 100% மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
மேற்கொண்டு, வரலாறு, அரசியல் அறிவியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய பாடங்கள் இணைந்த பிரிவில் பிஏ பட்டப்படிப்பை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.
“குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்த நான், எனக்கு நடைபெறவிருந்த குழந்தை திருமணத்தை எதிர்த்து, வீட்டை விட்டு வெளியேறினேன். தற்போது, வாழ்க்கைக் குறித்த ஒரு தெளிவான இலக்கு என்னிடம் உள்ளது. முதலில் வழக்கறிஞர் படிப்பை முடித்து, அத்தொழிலை மேற்கொண்டு, பின்னர், சிவில் சர்வீஸ் தேர்வை எழுத முடிவுசெய்துள்ளேன்” என்றார்.
வாழ்க்கையின் சூழல்களுக்கு எளிதில் பலியாகாமல், எதிர்த்துப் போராடுவோர், வெற்றியை தவறவிடுவதில்லை என்ற தத்துவத்திற்கு, இந்த இளம் கன்னடப் பெண் ஒரு சிறந்த உதாரணம்!
– மதுரை மாயாண்டி