20 பிராமணர்கள் மாறிய சூழலில்
திராவிட இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, பிராமணரல்லாத சாதியினர் விழித்துக்கொண்டுவிட்டதன் காரணமாக, சமூகத்தில் பிராமணர்களுக்கிருந்த அதீத மரியாதை, கௌரவம் வீழ்ந்தது.
இன்னொருபுறம் இடஒதுக்கீட்டின் விளைவாய் பிராமணர்களின் கல்வி, மற்றும் வேலை வாய்ப்புக்கள் கணிசமாகக் குறைந்துவிட்டன. ஆனால் எந்த அளவு அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
Tamil Brahmans: The Making of a Middle-Class Caste எனும் ஆய்வு நூல் பற்றி முன்னரே குறிப்பிட்டிருக்கிறேன். எந்த சாதியின் சமூக பொருளாதார சூழல் பற்றியும் முழுமையான ஆய்வு ஏதும் இல்லை. இன்றைய தலைவர்கள் அப்படிப்பட்ட ஆய்வினை அனுமதிக்கவும் மாட்டார்கள். ஆனால் பல்கலை பேராசியர்கள் சில வகை காரணிகள் அடிப்படையில் தோராயமாகக் கணிக்கமுடியும். அந்த வகையில் இந்நூலின் ஆசிரியர்கள் பிராமணர்கள் அப்படி ஒன்றும் மோசம் போய்விடவில்லை என்கின்றனர்.
நிலபுலன்களுடன் வசதியாக, தடபுடல் மரியாதைகளுடன் கிராமங்களில் வாழ்ந்து வந்தவர்கள் நகர்ப்புறங்களில் குடியேறிவிட்டனர். தொழிற்சாலைகளிலும் பின்னர் கணினி நிறுவனங்களிலும் பல்வேறு மட்டங்களில் வேலை கிடைத்து நடுத்தர வர்க்கத்தினராய்விட்டனர் பிராமணர்கள் என்கின்றனர் அந்நூலாசிரியர்கள்.
பிராமண முதலாளிகள் சிலர் தங்கள் சமூக இளைஞர்களுக்கு உதவமுயன்றிருக்கின்றனர். ஈசன் குழும நிறுவனர் ஈஸ்வர அய்யர், இண்டியா சிமெண்ட்ஸ் சங்கரலிங்க அய்யர், சன்மார் சுந்தரம் அய்யர், புல்லட் மோட்டார் சைக்கிள் தயாரிக்கும் ராயல் என்ஃபீல்ட் சுந்தரம் அய்யர் போன்றோர் தொழிற்துறையில் குறிப்பிடத் தகுந்த வெற்றி அடைந்திருக்கின்றனர். இவர்களனைவரும் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியைச் சேர்ந்தவர்கள். .
சிம்சன் சிவராமகிருஷ்ணன் மற்றும் டி வி சுந்தரம் அய்யங்காரும் திருநெல்வேலிதான். டி வி எஸ்சில் எங்கு திரும்பினாலும் பிராமணர்கள்தானே.
சென்னை இந்து குழுமத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். என் ராம் காம்ரேடாகக் காட்டிக்கொள்ளலாம். ஆனால் அது அய்யங்கார் மடமென்றால் மிகையில்லை. எங்கெங்கெல்லாம் வாய்ப்பிருக்கிறதோ அங்கெல்லாம் தங்கள் சமூகத்தினரைத் திணித்துவிடுவார்கள். இப்போது தெரிகிறது. அப்படி செய்தது தொழில் ரீதியில் பெரும் பின்னடைவு என. எனவே நிலை மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் அதன் அய்யங்கார் bias நிரந்தரம். பரந்த மனப்பான்மையுள்ள நிர்வாகம். மேலிடத்தில் இருப்பவர்களும் தாராள சிந்தனையுடையவர்களே. ஆனாலும் இந்துவில் அய்யங்காருக்கு பிரத்தியேக இடம் உண்டு. அக்குழுமத்தின் எந்த ஏட்டிற்கும், இதழிற்கும் பிராமணரல்லாதோர் ஆசிரியராகமுடியாது என்பதும் எழுதப்படாத விதியே.
அதாவது பிராமணர்கள் அப்படி ஒன்றும் அநாதைகளாகிவிடவில்லை. அவர்களை அரவணைப்பாரும் இருக்கின்றனர். ஆனால் இத் தொழிலதிபர்கள் செய்யத் தவறியது தங்களின இளைஞர் மத்தியில் பலவகைப் பட்ட திறன்களை வளர்க்கத் தவறியதுதான்.
பொறியியல் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற அதற்கென பொருளாதார, குடும்ப சூழல் தேவைப்படுகிறது. எல்லா பிராமணர்களுக்கும் அது வாய்த்துவிடுவதில்லையே. இல்லையெனில் கிளார்க்காகலாம். எத்தனைபேரை அத்தகைய பணிகளில் நியமிக்கமுடியும்?
எஞ்சியவர்கள்? தொழில்துறைக்குத் தேவையான திறன்களை வளர்ப்பதில் எந்த பிராமண முதலாளியும் அக்கறை காட்டவில்லை.
எடுத்துக்காட்டாக இந்துவை எடுத்துக்கொண்டால் அய்யங்கார் என்பதற்காகவே சேர்த்துக்கொண்டுவிடுவார்கள். ஆனால் அவர்கள் எதற்குமே லாயக்கற்றவர்களாயிருப்பார்கள்.
சாதி பார்த்து வேலை கொடுப்பதில் இந்நிறுவனங்கள் காட்டிய/காட்டும் அக்கறை சரியான திறன்களை வளர்த்தெடுத்து பிராமண இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பினைக் கூட்ட எந்த முன்முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை.
நான் எந்த ஒரு சாதியும் தத்தம் மக்களுக்காக மட்டுமே என எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதை ஆதரிக்கவில்லை. தங்கள் சாதி இளைஞர்களுக்காக ரொம்பவும் வேதனைப்படும் பிராமண பிரமுகர்கள் செய்யத் தவறியதை மட்டுமே இங்கு சுட்டிக்காட்டுகிறேன்.
அதற்கப்பால் சமூகத்தின் மேல்தட்டில் இன்னமும் பிராமணர்களுக்கு கணிசமான பங்கிருக்கிறது. சென்னை பண்பாட்டு தளத்தில் அவர்கள் வீச்சு பிரமிக்கத்தக்கதாகத்தான் இருக்கிறது.
இன்னொரு சுவையான அம்சம், மாறியிருக்கும் சமூக பொருளாதார சூழல் பழமையின் பிடியிலிருந்து பிராமணப் பெண்கள் மீளவும் உதவியிருக்கிறது என்பதுதான். மேலே குறிப்பிட்ட ஆய்வுநூலும் அதனை உறுதிப்படுத்துகிறது.
நகர்ப்புறங்களுக்கு, மற்ற மாநிலங்களுக்கு, நாடுகளுக்கு இடம் பெயர்ந்த பிராமண ஆண்கள் தங்கள் வேர் துண்டிக்கப்பட்டுவிட்டதாக வருந்துகின்றனர், இன்றளவும் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் சொந்த கிராமங்களுக்குச் செல்லவும் விரும்புகின்றனர், ஆனால் பெண்களோ, ஆளை விட்டால் போதும் சாமி, மடிசார் கட்டிக்கொள்கிறோம், பூசை எல்லாம் செய்கிறோம், பண்டிகை நாட்களைக் கொண்டாடுகிறோம், ஆனால் மீண்டும் அங்கே எங்களைத் தள்ளாதீர்கள், அது ஒரு பெரும் திறந்த வெளி சிறை, ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், தேவை இல்லாத வம்பளப்பு, நாங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறோம் எனக்கூறியிருக்கின்றனர்.
தவிரவும் படித்து, வேலைக்குப் போய், கணிசமான ஊதியம் பெற்று சுயசார்பை அடைந்துவிடுகின்றனரா, அந்நிலையில் ஆணுக்குப் பெண் அடிமை என்பதையும் ஏற்க மறுக்கின்றனர். இது எல்லா சாதியினர் மத்தியிலும் நடக்கவே செய்கிறது. ஆனால் பிராமணப் பெண்களுக்கு சமூக ரீதியாக ஒப்பீட்டளவில் கூடுதல் உரிமைகளை அனுபவிப்பதால் அவர்களால் பலவற்றைக் கேள்விக்குள்ளாக்க முடிகிறது, தங்கள் தனித்துவத்தை வலியுறுத்த முடிகிறது.
அதாவது பல்வேறு நெருக்கடிகளின் காரணமாக பிராமண இளைஞர்கள் சனாதனத்திற்குள் அடைபடும் அதே நேரத்தில், பெண்கள் மெல்ல மெல்ல விடுபடுகின்றனர்.
நான் முன்பு குறிப்பிட்டது போன்று தொடர்ந்து பெற்றோர்களின் விடாத அங்கலாய்ப்பு, பூணூல், சந்தியாவந்தனம் போன்ற வழிமுறைகள், இன்னொரு புறம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஒருவித கேலிக்குள்ளாவது, கல்வி, அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் காரணமாய் ஒதுக்கப்பட்டுவிடுவது இவையெல்லாம் பிராமண இளைஞர்கள் சனாதனத்திற்கு இரையாகவைக்கின்றன.
போதாக்குறைக்கு தொலைக் காட்சி ஊடகங்கள் தேச பக்தியை மிதமிஞ்சி போற்றுவது, பாகிஸ்தானை மன்னிக்கவே முடியாத துரோகியாகக் காட்டுவது நம்மூர் முஸ்லீம்கள் அனைவரும் பாகிஸ்தான் ஏஜெண்டுகள் என்ற ரீதியில் பேசுவது, இத்தகைய அருவருக்கத் தக்க பிரச்சாரத்தின் விளைவாய் பிராமண இளைஞர்கள் இந்துத்துவத்திலும் வீழ்ந்துவிடுகின்றனர்.
அவர்கள் இயல்பிலேயே பயந்தாங்கொள்ளிகளாகவும் இருப்பதால் தாழ்வு மனப்பான்மை வேறு. அதிலிருந்து தப்பிக்கவும் இந்துத்துவ சலம்பல்கள் பயன்படுகின்றன.
அவர்கள் பொதுவாக பாபர் மசூதி தகர்ப்பினைக் கொண்டாடுவார்கள், மோடியை ஆராதிப்பார்கள்,
பிராமண பெற்றோர்களுக்கு ஜெயலலிதா மேல் இருந்த அசாத்திய அபிமானம் பிள்ளைகளிடம் இருக்காது. வேறொன்றுமில்லை திராவிடர்கள் தங்களுக்கிழைக்கும் அநீதிகளுக்கு தங்கள் குலப் பெண்மணி ஒருவர் தகுந்த பதிலடி கொடுக்கிறார் எனும் மகிழ்ச்சி எல்லோருக்குமே இருந்தாலும், என்ன இருந்தாலும் பெண் தானே, நம் ஆணினத்தை இப்படி அவமானப்படுத்த அனுமதிப்பதா என்ற கோபம் பிள்ளைகள் மத்தியில்.
பெண்கள் அடிமைத்தளையிலிருந்து விடுபட இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் இருந்தாலும், முணுமுணுப்பு, கோபம், எரிச்சல், இவை குடும்ப உறவுகளைக் கூட பாதிக்கின்றன.
பிராமணர்கள் பலர் அங்கலாய்ப்பது போன்று இன்று அவர்கள் எதிர்கொள்வது சமூக நீதியினையா, இனச் சுத்திகரிப்பையா என்ற கேள்விக்கு விடை தேடுவதில் துவங்கியது இத்தொடர். வரலாற்றை சரிவர புரிந்துகொண்டால் பல்வேறு சிக்கல்களிலிருந்தும் மீளலாம் என்ற ஆதங்கத்தின் விளைவாய் எழுந்ததுதான்.
இத் தொடரில் சொல்ல விடுபட்ட மற்ற பல பரிமாணங்களை புத்தக வடிவில் வெளியாகும் வாய்ப்பு ஏற்படுமானால், அப்போது அவற்றை விவாதிக்கலாம்.
பத்திரிகை.காமிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
(முற்றும்)