18 எங்கிருந்து வந்தது இப் பிரபஞ்சம்?

பெரியாரின் தவறு கருணாநிதியின் அட்டகாசங்களைக் கண்டிக்காமல் விட்டதுமட்டுமல்ல. அவர் வேதகால பிராமணீய மதத்தில் காணப்படும் சில முற்போக்கு அம்சங்களை கருத்தில் கொள்ள வில்லை என்பதும் அவரிடமிருந்த பெரும் போதாமை.

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் அரேபியர்கள் சிந்து நதிக்கப்பால் வசித்த மக்களை இந்துக்கள் என அழைக்கத் தொடங்கியதன் பிறகே இந்து மதம் என்ற ஒன்று இருப்பதாகவே புரிந்து கொள்ளப் பட்டது.  அதுவரை இறை நம்பிக்கைகள், வாழ்முறை எல்லாம் பிராமணீய கோட்பாடுகள் படியே. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் சில இந்து சமூக அடிப்படை இயல்புகள் மாறவில்லை.

பொதுவாக இந்துக்கள் தீவிர வழிபாட்டாளர்கள் அல்ல. அவரவர் வழி அவரவர்க்கு என்ற தாராள சிந்தனை. இராமாயணத்திலேயே மறுமையை மறுத்துப் பேசும் ஜாபாலி முனிவரை சந்திக்க முடிகிறது.

ஜவஹர்லால் நேரு இந்த ரிக் வேத கவிதையினை சுட்டிக்காட்டியிருக்கிறார்:

யாருக்குத் தெரியும், எங்கிருந்து வந்தது, எப்போது உருவானது இந்தப் பிரபஞ்சம் என

தெரியும் என்று சொல்பவர்கள் எல்லாமே பின்னர் வந்தவர்கள் தாமே பின் எப்படி அவர்களால் முன்னால் என்ன இருந்ததென்பதை உறுதியாகக் கூறமுடியும்

ஆகாயத்திலிருந்து எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கும் அவனுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அவனுக்குத் தெரியுமா என்பது கூட சந்தேகமே

கிறித்து பிறப்பதற்கு 1,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருக்கும் ரிக் வேதம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பு. அவ்வளவு முந்தைய காலகட்டத்தில் இப்படி தீவிரமாக கேள்வி எழுப்புவோர் இருந்திருக்கின்றனர் என்பது இந்திய துணைகண்டத்தில் வாழும் அனைவர்க்கும் பெருமைதான்.

அவ்வாறு எழுதியதெல்லாம் சமூக அடுக்கின் உச்சத்தில் இருந்தவர்கள், மற்றவர்களை இழிபிறவிகளாகப் பார்த்தவர்கள் என்பதெல்லாம் வேறு பிரச்சினை. ஆனால் பிராமணர்கள் வாழ்வே கடவுளைக் காட்டி பயமுறுத்தலில் இருந்தபோது, இப்படி கேள்விகள் கேட்கவும் துணிச்சல் வேண்டுமல்லவா? எனவேயே வீண் பழம் பெருமை பேசாத நேருவும் பெருமிதப்பட்டுக்கொண்டார்.

பெரியாருக்கு அத்தகைய விசாலமான பார்வைகள் இருந்திருக்க வாய்ப்பில்லை. எப்படியும் அவரது நோக்கம் சாத்திரங்கள் அனைத்தையும் சதி என நிறுவுவதுதானே.

பிராமணர்கள், இந்து மதம், இதிகாசங்கள், வேதங்கள் உள்ளிட்டவை வீற்றிருந்த பீடத்தையே அசுரவேகத்தில் நொறுக்க விரும்பினார் அதில் கணிசமான வெற்றியும் கண்டார். ஆனால் அந்த சாதனை முழுமை பெறாமல் போனது ஏன்?

அவர் தமிழ்ச் சமூகத்தினை சரியாக எடைபோடவில்லயோ என அஞ்சுகிறேன். மற்ற மாநில இந்துக்களைப் போல இங்கும் பொதுவாக மக்கள் இறைநம்பிக்கை மிகுந்தவர்களே. அதே நேரம் பிராமணர்கள் தங்களை ஏமாற்றுகின்றனர், தங்களுக்கு உரிய பங்கையும் அளிக்க மறுக்கின்றனர், மோசமாக நடத்துகின்றனர் என்பதெல்லாம் அடி மனதில் ஆழமாக பதிந்துதான் இருந்தது.

அவர்கள் தங்கள் எண்ணிக்கையின் வலிமையை மெல்ல மெல்லவே உணரமுடிந்தது. ஒரு பக்கம் பிரிட்டிஷார் இன்னொரு பக்கம் பெரியார், பிராமணர்களைப் பார்த்து மிரளவேண்டிய அவசியம் இல்லை என்பதை அறிவுறுத்த, மாயத்திரையும் விலகத் தொடங்கியது.

ஆனால் இறை நம்பிக்கை ஒன்றும் குலைந்து போய்விடவில்லை. சம்பிரதாயங்கள் மீதிருந்த பற்றும்தான். பெரியார் சுயமரியாதை நடத்திவைத்த கால கட்டத்தில் கூட, முன்னதாக அய்யரை வைத்து திருமணத்தை ரகசியமாக முடித்துவிட்டு அப்புறம் மேடைக்கு வருவார்கள் என்று சொல்லுவார்கள். அது உண்மையோ பொய்யோ, நிச்சயம் வீரமணி கட்டத்தில் அப்படி நடக்கிறது என்பதை பலரிடமிருந்தும் என்னால் உறுதிப்படுத்திக்கொள்ளமுடிந்தது.

அதிலும் பிராமண ஆதிக்கத்திற்கெதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்த சைவ பிள்ளை மாரெல்லாம் தீவிர சைவர்கள். தாங்கள் பார்ப்பனரைவிடவும் உயர்வானவர்கள் என்ற எண்ணம் கூட அவர்களுக்குண்டு. அவர்கள் நோக்கமெல்லாம் பிராமணர்களை வீழ்த்துவது மட்டுமே.அவர்கள் மத்தியில் தஞ்சை ராமநாதன் போன்ற பகுத்தறிவாளர்கள் மிகக் குறைவே.

பலிஜா நாயுடு/ரெட்டியார்/நாயக்கர்கள் போன்ற மற்ற உயர்சாதி பிராமணரல்லாதாரின் நிலையும் அதுவே.

இந்த பின்புலத்தை சரிவர புரிந்துகொண்டால், பெரியார் எங்கே தவறிழைத்தார் என்ற கேள்விக்கும் வினா கிடைக்கும்.

முதலாவதாக அவர் வரைமுறையின்றி இந்துக் கடவுளரையும் சாத்திரங்களையும் சாடியது பகுத்தறிவுப் பிரச்சாரத்தின் எல்லையினை குறுக்கியது,

அம்பேத்கர் தன்னை புத்த மதத்தில் இணைந்து விடுமாறு அழைத்ததாகவும் அப்போது பதிலுக்கு, ” முதலில் நீங்கள்  சேருங்கள், நான் இப்போது சேருவது என்பது அவ்வளவு ஏற்றதல்ல. ஏனென் றால் தமிழ்நாட்டில் நான் இப்போது சாதி ஒழிப்பைப் பற்றித் தீர்மானமாகப்  பிரச்சாரம் செய்து வருகிறேன். இந்தியக் கடவுள்கள் எனப்படும் விநாயகர், இராமர் சிலைகளை உடைத்தும், படங்களை எரித்தும்  இந்து மதத்தி லுள்ள பல விஷயங்களைப் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்லி இப்போது பிரச்சாரம் செய்வது போல் அப்புறம் நான் செய்ய முடியாது. ஒரு இந்துவாக இருந்து கொண்டு இப்படிப் பேசுவ தனால் என்னை யாரும் நீ அதைச் சொல்லக் கூடாது’ என்று தடுக்க உரிமை கிடையாது. ஆனால் நான்,இன்னொரு மதக்காரனாக இருந்தால் அப்படிப்பட்ட வசதி எனக்கு இருக்க முடியாது,” என தான் கூறியதாகவும் பெரியார் குறிப்பிட்டி ருக்கிறார்.

அது சரியான அணுகுமுறைதான், தவறில்லை. ஆனால் தடாலடி நாத்திகம் பேசிய பகுத்தறிவு வாதி  இந்துக்களின் செயல்பாடுகளை, அவர்களின் கடவுளரை மட்டுமே தீவிரமாக சாடி,  மற்ற மதத்தாரிடம் நீக்கு போக்காகவே நடந்துகொண்டது எந்த அளவில் சரி?

இப்போது பன்றி பூணூல் பிரச்சினையில் போல் அப்போதும் இவர் இந்த சாத்து சாத்துகிறாரே இதே அளவு இஸ்லாமியரை சாடிவிடமுடியுமா என்ற முணுமுணுப்பு பரவலாகவே இருந்தது.

முஸ்லீம்களை அங்குமிங்கும் ஏதோ விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்களது தீவீர இறைப் பற்றை அவர் கேள்விக்குள்ளாக்கியதில்லை. கிறித்தவர்கள் பற்றிக் கூட அதிகம் பேசியதில்லை.

முஸ்லீம்களை தாக்கினால் அவர்கள் கொதித்தெழுவர். விளைவுகள் விபரீதமாக இருக்கக்கூடும். நம்மை ஆண்டுவந்த பிரிட்டிஷார் கிறித்தவர்கள். அவர்களைப் பகைத்துக்கொள்ளுதல் அவருடைய நோக்கங்களுக்கு இடையூறுகளையே உருவாக்கியிருக்கும்.

எனவேயே அவரது சமரசங்கள். அவையே அவரது பணி முழுமை பெறாமலிருப்பதற்கும், பின்னர் வக்கிரங்கள் உருவாவதற்கும் காரணமாய் அமைந்தன.

(தொடரும்)