ண்மையில் பெரியார் திராவிடர் கழகம் ஆவணி அவிட்டத்தன்று ஒரு பன்றிக்கு பூணூல் அணிவித்து முப்புரி ஒன்றும் மகத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக பன்றிகளுக்கே அது பொருந்தும் என்று பிரகடனம் செய்ய விரும்பினர். நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது வேறு.

முதலிலேயே கட்சி செயலாளர் கு இராமகிருட்டினன் போலீஸ் அனுமதி கிடைக்காது என்று தெரிந்தே போராட்டத்தை அறிவிப்பதாகச் சொன்னார். அதாவது பார்ப்பனருக்கு தமிழ்ச் சமூகத்தில் என்ன நிலை என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தும் வகையிலேயே அந்நிகழ்வு என்பதுதான் செய்தி.

பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள்.

தேவசுந்தரதாஸ் கணபதி, தலித் ஆர்வலர்:

பூணூலை பன்றிக்கு அணிவிப்பதால் சமூகத்தில் என்ன மாற்றம் நிகழும் ? ஒன்றும் நிகழாது. பிராமணரை பன்றிக்கு சமமாக்கி விட்டதாக தங்களளவில் சிலர் மகிழ்ந்து கொள்ளலாமே தவிர சமூகத்தில் எந்த மாற்றமும் நிகழாது. என்னளவில் இதில் ஒரு வித வக்கிர உணர்வு வெளிப்படுகிறதே அன்றி பலன் ஏதும் இருக்கப்போவதில்லை.

தீவிர கருணாநிதி ஆதரவாளர் ஸ்டான்லி ராஜன்:

சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட  தலித் இளைஞர் படுகொலை

இதனை எல்லாம் இந்த திராவிட கழகம், பெரியாரிஸ்டுகள் எல்லாம் கண்டிக்கமாட்டார்கள், மாறாக பிராமணரின் பூனூலில் மட்டும் தலைகீழாக தொங்கிகொண்டிருப்பார்கள்.

இரு பன்றிகளை பிடித்து இது தலித் பன்றி, இது உயர்சாதி பன்றி அந்த இரண்டிற்கும் திருமணம் செய்வித்து எங்கள் எதிர்ப்பினை தெரிவிக்கின்றோம் என சொல்லட்டும் பார்க்கலாம் அதெல்லாம் செய்யமாட்டார்கள்

அதுவும் ஒரு பன்றிக்கு வன்னியர் என்றும், ஒரு பன்றிக்கு நாடார், தேவர், தலித் எனவும் பெயரிட சொன்னால் வங்க கடலை தாண்டி ஓடிவிடுவார்கள்

ஆனால் பிராமணர்கள் என்றால் மட்டும் இழுத்துபோட்டு அடிக்க இவர்கள் ரெடி, காரணம் அந்த சாதிமட்டும்தான் திரும்ப அடிக்காது, மற்றசாதி என்றால் வெட்டி எறிந்துவிடும்,

அதனால் பிராமணரையே வம்புக்கு இழுப்பது, அது பெரியாரிசம், திராவிடயிசம் என சொல்லிகொள்வது.

பிராமணன் என அவனையே சாதி என சொல்லி கரித்துகொட்டுவது, சூத்திர சாதிக்குள் சாதிபெயரால் வெட்டு குத்து என்றால் குத்துகல்லாக இருப்பது..

இதுதான் இப்போதுள்ள திராவிட கழக கொள்கை

இப்பதிவு அனைத்து பரிமாணங்களையும் தொட்டுக்காட்டியிருப்பதாகத் தோன்றுகிறது.

பெரியாரின் அதிரடி அரசியலின் விளைவே இப்படிப்பட்ட வக்கிரங்களெல்லாம். அவர் காலத்திற்கு சரியாகக் கூட இருந்திருக்கலாம். முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பிராமணர்களோ வேதியர் வர்க்கம்,  அனைத்து சாதியினரும் ஏதோ ஒரு வகையில் சடங்குகளை அனுசரிக்க விரும்பினர், அந்த நிலையில் பிராமணர்கள் குறித்து ஒருவித பிரமிப்பு நிலவியது. அத்தகைய பிரமையினை தகர்க்கவேண்டுமானால் சகட்டுமேனிக்கு சாடி, பார், ராமனை திட்டுவதால் அல்லது பார்ப்பானை ஏசுவதால் உனக்கும் எனக்கும் என்ன ஆகிவிட்டது என்று கேட்கும் வகையில் அமைந்திருந்தது.

இந்த அணுகுமுறையில் உள்ள சிக்கல்களுக்கப்பால், பெரியார் எங்கே பிழைபட்டார் என்றால் 1967ல் அவரது முன்னாள் சீடர்கள் ஆட்சிக்கு வந்து, அதிகார மையங்களிலிருந்து பிராமணர்கள் வேகமாக அப்புறப்படுத்தப்பட்டு வந்த நிலையிலும், இனியும் அவர்கள் ஜம்பம் செல்லுபடியாகாது எனத் தெரிந்தும், தொடர்ந்து இந்துக் கடவுளரையும் பார்ப்பனரையும் பழைய பாணியிலேயே தாக்கிக் கொண்டிருந்ததுதான்.

தேர்தல் அரசியலுக்கு வந்ததாலோ என்னவோ திமுக நிறுவனர் அண்ணா சாடலின் வேகத்தைக் குறைத்தது மட்டுமின்றி, பிராமணர்கள் மட்டுமே சாதீயத்தை உயர்த்திப் பிடிப்பதாகக் கருதக்கூடாது எனக் கூறி வந்தார்:

” தம்பி , ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன் நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம்.

எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.

ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.

எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் – அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப் போடா சூத்திரப் பயலே! – என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்!
கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!
படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்!
மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! – என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்
(9 – 10 – 1955 , திராவிடநாடு )

ஆனால் பெரியாரோ தன் பாணியினை மாற்றிக்கொள்ளவே இல்லை. விடுதலைக்குப் பின்னர் தமிழகத்தில் துவங்கியிருந்த மாற்றங்களின் வீச்சு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை.

பிராமணர்களின் செல்வாக்கு குறைந்து வந்தது. காமராஜருக்கே அதிகமாக அவர்களைப் பிடிக்காது. அரசு இயந்திரத்தில் அதற்கேற்ப மாறுதல்கள் செய்து வந்தார். பெரியாரும் அவரை பச்சைத் தமிழன் எனப் பாராட்டி ஆதரித்தும் வந்தார்.

1967ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், குறிப்பாக கருணாநிதி தலைமை யில் பிராமணர்கள் பல் ஒவ்வொன்றாகப் பிடுங்கப் பட்டு வந்தது. அந்த நேரத்திலும் பெரியார் பார்ப்பனர் மீது உக்கிரமாக தனது தாக்குதல் களைத் தொடர்ந்தார். ராமர் பொம்மைக்கு செருப்படி என்றெல்லாம் ஆர்ப்பாட்டங்கள்.

அந்த நேரமோ கருணாநிதி லஞ்ச லாவண்யமும், அராஜகமும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்து வந்தது. பிராமணரல்லாதார் பெயரைச் சொல்லி அவர் தன்னை வளப்படுத்திக்கொண்டு வந்தார், பழி வாங்கும் அரசியலிலும் ஈடுபட்டார். இது குறித்து பெரியார் வாய் திறக்கவில்லை. மாறாக தன் சீடன் என கலைஞரை வாரி அணைத்துக்கொண்டார்.

(தொடரும்)