16. ஊசிமுனை நிலமும் இல்லை

பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்துக் களமிறங்கிய நீதிக் கட்சியினருக்கு பிரித்தானிய அரசின் ஆதரவிருந்தும் அவர்களால் பெரிதாக தாக்கமெதனையும் ஏற்படுத்தமுடியவில்லை. பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களின் நம்பிக்கையினைப் பெறமுடியவில்லை.

மனம் நொந்து காங்கிரசிலிருந்து வெளியேறிய ஈவேராவும் நீதிக்கட்சியில் இணையத் தயங்கினார். அவர் தஞ்சை இராமநாதன் நடத்தி வந்த Self Respect League,  சுயமரியாதைக் கழகத்தின் மூலமே தனது முதற்கட்ட நடவடிக்கை களை மேற்கொண்டார்.

இராமநாதனும் துவக்கத்தில் காங்கிரஸ்காரர்தான். சைவ பிள்ளைமார் சாதியைச் சேர்ந்தவர். பிராமணரல்லாதோரில் மிக உயர்ந்த பிரிவினராகக் கருதப்பட்ட அச் சமூகத்தினருக்கும் பிராமணர்களுக்கும் எப்போதும் கடும் மோதல்கள். வசதி வாய்ப்பெல்லாம் இருந்தும், பழுத்த ஆத்திகர்களாக இருந்தும், இதர சூத்திர சாதியினர் இவர்களுக்கு அபரிமித மான மரியாதை காட்டினாலும், சாதிப் படிக்கட்டின் உச்சத்திலிருந்த பார்ப்பனர்கள் பிள்ளைமாரை மதிப்பதாக இல்லை.

ராமநாதனும் பலமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறார். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, அவரும் நண்பர்கள் சிலரும் ரெட் ஹில்ஸ் செல்கின்றனர். நீச்சல் எல்லாம் முடித்துவிட்டு, மதிய உணவுக்கு ஒரு நண்பர் வீட்டுக்கு செல்கின்றனர். மற்றவர்கள் உள்ளே போய்விடுகின்றனர். இராமநாதன் மட்டும் தடுக்கப்படுகிறார். அவருக்கொன்றும் புரியவில்லை.

“பிராமணர்களுடன் அமர்ந்து உண்ணமுடியாது. நீ வெளியே காத்திரு. அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் உனக்கு இங்கேயே பரிமாறச் சொல்கி றோம்,” என்று சொல்லப்படுகிறது.

அந்த வீட்டுக்காரர்கள் அப்படிக் கூறியதைவிடவும், நண்பர்கள் சற்றும் கவலையே படாமல் உள்ளே போய் சாப்பிடத் துவங்கியிருந்தது தான் இராமநாதனுக்கு பேரதிர்ச்சி. அவர்களனைவரும் பிராமணர்கள். எனவே அவர்களுக்கு தங்கள் நண்பன் ஒருவனை வெளியே நிறுத்தியது தவறாகவே படவில்லை. அதுதானே ஆச்சாரம்?.

என்ன செய்யலாம். உள்ளே போய் சண்டை போடலாமா? எல்லோரையும் நாலு சாத்து சாத்தலாமா என்று தோன்றுகின்றது. நல்ல பசி வேறு அவருக்கு.  ஒரு மரத்தடியில் நின்று அழுகிறார்.

ஆனால் சட்டப் படிப்பை முடித்துவிட்டு அவரும் காங்கிரசில்தான் இணைகிறார்.

அந்தக் காலகட்டத்தில் காலனீய ஆட்சியினை எதிர்த்தவர்களுக்கு காங்கிரசை விட்டால் வேறு வழியில்லைதானே. தீவிர செயற்பாட்டாளரான இராமநாதன் சென்னை ராஜதானி காங்கிரசின் பிரதிநிதியாக 1918 அமிர்தசரஸ் மாநாட்டில் கலந்துகொண்டார். ஈவேராவுக்கு நெருக்கமாகிறார்.

காங்கிரசில் முக்கிய பொறுப்புக்களிலிருந்த பிராமணர்களின் மமதை, சாதி வெறி பல வழிகளிலும் வெளியாக, இருவருமே அந்நியப்படுகின்றனர். காஞ்சிபுரம் தோல்விக்குப் பிறகு இராமநாதன் சுயமரியாதைக் கழகத்தினை நிறுவுகிறார். அதில் இணைந்தவர்கள் பெரும்பாலானோர் பிராமணரல்லாத காங்கிரஸ்காரர்கள்தான்.

காங்கிரசிலிருந்து வெளியேறி, நீதிக் கட்சியிலும் சேரமுடியாமல் என்ன செய்வதென்று பெரியார் தவித்துக்கொண்டிருந்த நேரத்தில், சுயமரியாதைக் கழகத்திற்கு தலைமை தாங்குமாறு ராமநாதனும் அவரது நண்பர்களும் கோருகின்றனர்.

அவரும் ஏற்றுக்கொள்கிறார். பிறகுதான் சுயமரியாதைப் பிரச்சாரம் சூடு பிடிக்கிறது. நீதிக் கட்சித் தலைவர்களால் செய்யமுடியாததை பெரியார் சாதித்துக்காட்டுகிறார், பிராமணரல்லாதோரை  விழிப்படையச் செய்கிறார், பெருமளவில் அணி திரட்டுகிறார், சாமி சாமி என்று காலில் விழுவது அருவருக்கத் தக்கது, சுயமரியாதைக்கிழுக்கு என புரியவைக்கிறார்.

நீதிக் கட்சித் தலைவர்கள் பிராமண எதிர்ப்பாளர்கள் என்றாலும் சனாதனி கள். மெத்தப் படித்தவர்கள். செல்வந்தர்கள். அவர்களால் எழுதமுடியும், சட்ட அவையிலும் வெளியிலும் ஆங்கிலத்தில் பேசமுடியும். ஆனால் அவர்களால் பொது மக்களிடம் எச் செய்தியையும் கொண்டு சேர்க்க இயலவில்லை.

பெரியார் அதிகம் படித்தவர் அல்ல. இயல்பாக, சரளமாக, பல நேரங்களில் கொச்சையாகப் பேசியே அவரால் மக்களைக் கவரமுடிந்தது. சேரன்மா தேவி பிரச்சினையின் போதே மாநிலமெங்கும் அவர் கூட்டங்கள் நடத்தி னார். சுய மரியாதைக் கழக தலைவரான பின் நாள் தோறும் கூட்டங்களில் பேசினார். சளைக்கவே இல்லை. அபார சக்தி அவருக்கு. பார்ப்பனர்களை ஒரு கை பார்த்துவிடுவது என்பதில் தீர்மானமாயிருந்தார். அப்படி அவர் களத்தில் இறங்கிய பிறகு அவரை யாராலும் தடுக்கவே முடியவில்லை. இறுதிவரை அவர் ராஜாஜிக்கு நெருக்கமான நண்பராக இருந்தாலும் தன் போக்கினை அவர் மாற்றிக்கொள்ளவே இல்லை.

பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க முதலில் அவர்கள் மீது, அவர்கள் சொல்லும் மந்திரங்கள் மீது, அவர்கள் கொண்டாடும் கடவுளர் மீது, புராணங்கள் மீது அனைவருக்கும் இருந்த பிரமிப்பை,. அபரிமித மரியாதையை, பிரமையினை ஒழிக்கவேண்டும் என்றுணர்ந்த பெரியார் மேடைக்கு மேடை இந்துக் கடவுளரையும் இதிகாசங்களையும் ஆபாசமாக ஏசத் துவங்கினார். அவரது சீடர்களும் அவரது பாணியினை பின்பற்றத் துவங்கினர்.

இறைப் பற்று மிகுந்த பிராமண எதிர்ப்பாளர்கள், அல்லது பொது வெளியில் நாகரிகம் வேண்டுமென்று நினைத்த வர்கள் பலர் முகம் சுளித்திருக்கலாம். ஆனால் பரந்து பட்ட மக்களை பெரியாரின் செய்திகள் எளிதாக சென்ற டைந்தன.

மகாபாரதத்தில் பாதி சாம்ராஜ்ஜியம் கொடுங்கள் என்று துவங்கி கிருஷ்ணன் ஐந்து ஊர், கிராமமாவது பாண்ட வர்களுக்கு கொடுங்கள் என மன்றாடுவார். ஆனால் ஊசிமுனை நிலம் கூட கொடுக்கமாட்டேன் என துரியோதனன் கொக்கரிப்பான். அதன் விளைவு கௌரவர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்தனர்.

அதுபோலவே சேரன்மாதேவி துவங்கி எல்லா பிரச்சினைகளிலும் பெரியா ரும் அவரது சகாக்களும் அன்றைய யதார்த்தங்களை ஏற்றுக்கொண்டு சலுகைகள்தான் கோரினர். பிராமணர்களின் மூர்க்கத்தனமான பிடிவாதம் அவரை தீவிர பிராமண எதிர்ப்பிற்கு தள்ளியது.

டி எம் நாயர் நீதிக் கட்சி தொடங்க காரணமாயிருந்தது கூட பிராமணர்கள் அவரை ஒரு தேர்தலில் தோற்கடித்ததுதான்.

மக்கட் தொகையில் இரண்டரை, மூன்று சதம் இருந்துகொண்டு எல்லா துறைகளிலும் ஆதிக்கம் செலுத்திய பிராமணர்கள், பெரும்பான்மை பிராமணரல்லாதார் தங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கோரும்போது அதற்கு உடன்பட்டிருந்தால், இன்று அவர்கள் ஓரம் கட்டப்படிருப்பார்களா? எள்ளி நகையாடப்படும் சூழல் உருவாகியிருக்குமா?

(தொடரும்)