தொடர்-14

ண்மைக்கால வரலாற்றில் மராட்டியத்தில் ஜோதிபா பூலே, கேரளத்தில் நாராயண குரு உள்ளிட் டோரும் தீவிரமாக பிராமண ஆதிக்கத்தை எதிர்த்திருக்கின்றனர்.

ஆனால் மற்றவர்களைவிட கடும்போக்காளர் பெரியார். அத்தகைய போக்குதான் அவருக்கு வெற்றியளித்ததா என்பது விவாதத்திற்குரியதே.

இக்கட்டுரைத் தொடர் துவக்கத்தில் நான் பிராமணர்களென்றுதான் சொல்லப்போகிறேன், பார்ப்ப னர் என்றல்ல. பார்ப்பனர் என்பது வசைச் சொல்லாகக் கருதப்படுகிறது. எந்த ஒரு சமூகத்தையும் வசைபாடுதல் எனக்கு உடன்பாடில்லை எனக் குறிப்பிட்டிருந்தேன்.

அதே போல இங்கும் ஒரு தன்னிலை விளக்கம் தேவைப்படுகிறது. பெரியாரை ஏன் பெரியார் என அழைக்கவேண்டும்? வெறுமனே ஈவேரா என்று ஏன் சொல்லக்கூடாது?

அவர் மீது அதிக மரியாதை இல்லாதவர்கள் அப்படி அழைக்கலாம் தவறில்லை. வெறுப்பாளர்கள் நாயக்கர் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இன்னொரு புறம் அவர் தந்தை பெரியாரென்று பலராலும் போற்றப்படுகிறார்.

என் பார்வையில் நம் எல்லோருக்கும், முப்பாட்டன் காரல் மார்க்ஸ்தான். அனைத்து வேறுபாடு களையும், முரண்பாடுகளையும் கடந்த உலகளாவிய மனித நேயம் மார்க்சினுடையது.

அதே நேரம் தமிழர்களை பிராமண ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுத்தவர் ஈ.வே.ராமசாமி. அது பாரிய பங்களிப்பு.  சமூக நீதி கோரும் தமிழன் நான், அந்த அளவில் அவரை பெரியார் என்று புகழ்வது சரியே என நினைக்கிறேன். தந்தை பெரியார் எனவும் அழைக்கலாம்தான், ஆனால் அவர்மீது எனக்கு கடுமையான விமர்சனங்களும் உண்டே. எனவே பெரியார் என்பதோடு நிறுத்திக்கொள்கி றேன்,

ஆராய்ச்சியாளர் ஒருவர் பெரியாரின் அணுகுமுறைகளை கடுமையாக சாடிக்கொண்டிருந்தார். எனக்கும் அவரது பிரச்சார பாணி குறித்து கேள்விகள் பல உண்டு. பிராமண ஆதிக்கத்தை அகற்ற அத்தகைய துவேஷப் பிரச்சாரம் தேவைப் பட்டதா, அதை மட்டும் தானே அவரது இன்றைய சீடர்கள் உக்கிரமாகப் பிடித்துக்கொண்டிருக்கின்றனர், பண்பாட்டுப் பொதுவெளியினை அத்தகைய வன்முறை மொழி நாசப்படுத்துகிறது என்றும் நான் நினைக்கிறேன். ஆனாலும் அவர் வாழ்நாளில் தலைவிரித்தாடிய பிராமண வெறிக்கு, ஆதிக்கத்திற்கு முடிவுகட்ட அத்தகைய அணுகுமுறை தேவைப்பட்டிருக்கலாம் என்றேன் என் நண்பரிடம்.

அதற்கு அவரது பதில்: ”ஈவேரா போராட்டம் தேவைப்பட்டது உண்மை. அதற்கான நியாயங்கள் எல்லாமே இருந்தன. ஆனாலும் அவர் எல்லாவற்றையும் ரொம்பவே கொச்சைப் படுத்திவிட்டார். எப்படியும் தேர்தல் ஜனநாயகம், வயது வந்தோர் அனைவர்க்கும் வாக்குரிமை,  என்ற நிலையில் பெரும்பான்மை பிராமணரல்லாதார் இயல்பாகவே மேலெழுந்திருப்பார்கள். பிராமணர்கள் ஓரங்கட்டப் பட்டிருப்பார்கள்…எனவே ஓரளவுக்கு மேல் அவரைப் புகழ்வது எனக்கு உடன்பாடில்லை…”

ஆனால் சுற்று முற்றும் பாருங்கள். நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளாகிவிட்டன. முதல் பொதுத்தேர்தல்கள் 1952ல். அதன்பிறகு எத்தனை தேர்தல்கள், எத்தனை முதல்வர்கள், பிரதமர் கள்? ஆனால் பிராமண ஆதிக்கம் இந்திய அளவில் அகற்றப்பட்டிருக்கிறதா?

ட்விட்டர் பிரபலம் சசிதரன் பழூர், பசு, யோகா, கிச்சடி, அயோத்தி, புலால் மறுப்பு இவையே இன்று ஆராதிக்கப்படுகின்றன. இந்தியாவில் பிராமண ராஜ்ஜியம் மீண்டும் வந்துவிட்டது என்பதற்கு வேறு ஆதாரம் என்னவேண்டும் என்கிறார்.

மத்திய அரசு மூத்த அதிகாரிகளில் பலர் பிராமணர்களே. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் அதிக எண்ணிக்கையில் அவர்களைக் காணமுடிகிறது. மோடி பரிவார எழுச்சியின் பின்னணியில் அவர்களது ஆதிக்கம் மேலும் வலுப்படும். சிறைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்த ஒருவர் மராட்டியத்தில் பெரும்பான்மை கீழமை நீதிபதிகள் பிராமணர்களே என்கிறார்.

உ.பியைத் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் ஐந்து சதத்திற்கும் கீழ்தான். எனவே வாக்கு ரீதியாக அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரை எங்கும் பிராமணரல்லாதாரின் கட்டுப்பாட்டிலேயே அவை இயங்குகின்றன. ஆனால்  சனாதனிகள் பிராமணர்களுக்கு எப்போதுமே கொடுத்துவரும் மதிப்பும் மரியாதையும் இப்போது கூடுதல் உத்வேகம் பெறுகின்றன.

இப்படிச் சொல்வதாலேயே பிராமணர்கள் எங்கும் செழித்து வளர்கின்றனர் என்று பொருளல்ல. ஆனால் நாட்டு விடுதலைக்குப் பின்னரும், வயது வந்த ஒவ்வொருவருக்கும் ஒரு வாக்கு என்ற நிலையிலும் மிகச் சிறுபான்மையினரான பிராமணர்களின் செல்வாக்கு பல தளங்களிலும் முன்பிருந்தது போலவே இன்னமும் தொடர்கிறது என்பதைத்தான் நாம் இங்கே நோக்கவேண்டும்.

அதாவது இயல்பான ஜனநாயக வளர்ச்சியில் சிறுபான்மை பிராமணர்களின் செல்வாக்கு ஒன்றும் அழிந்துவிடவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. மாநிலத்திற்கொரு பெரியார் பிறந்திருந்தால்?

பகுஜன்சமாஜின் கன்ஷிராம் ஒரு கட்டத்தில் பெரியாரை உத்திர பிரதேசத்தில் அறிமுகம் செய்து வைக்க முயன்றார். அங்கே பிராமணர்கள் 11 சதம் என்று கணக்கிடப்படு கிறது. அரசியலில் அவர்கள் ஆதிக்கமில்லை என்றாலும் அவர்கள் செல்வாக்கிற்கு பஞ்சமில்லை. அங்கு பிராமண மாஃபி யாக்களே  உண்டு. அந்த நிலையில் தான் கன்ஷிராம் பெரியார் கீழ்சாதியினர் கூட்டமைப்பு உருவாக பெரியாரைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டார்.

ஆனால் தலித் மக்களில் சில பிரிவினர் மீது மட்டுமே அக்கறை செலுத்தியதன் விளைவாய் தேர்தல் தோல்விகளை சந்தித்த மாயாவதி, ஒரு கட்டத்தில் பிராமணர்களையும் சேர்த்துக்கொண் டால்தான் தனக்கு நல்லது என நினைத்து பகுஜன் சமாஜை சர்வ சமாஜாக்கினார். சில தோல்வி களுக்குப் பின்னர் அவர் மறுபடி பகுஜனுக்கே திரும்பிவிட்டார் என்பது வேறு. ஆனால் அரசியல் ரீதியாக பிராமணர்கள் தனக்குப் பயன்படுவார்கள் என மாயாவதி போன்றோர் நினைக்கின்றனர் என்பது ஒரு செய்திதானே.

பொதுவாகவே இன்றைய கட்டத்தில் பிராமணர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகக் குறைவுதான் என்றாலும், அவர்களுடைய ritual status  சடங்கு,  சம்பிரதாய ரீதியான கவுரவம் சற்றும் குறைந்த பாடில்லை. புதிய பாதுகாப்பு அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்றபோது கூடவே புரோகி தர்களையும் அழைத்துச் சென்று, பூஜை செய்யச் சொல்லி, ஆசியும் பெற்றாரே.

தமிழகத்தில் இந்த போக்கு சற்று தணிந்து, தளர்ந்து மீண்டும் வலுப் பெற்று வருகிறது. பெரியாரது அணுகுமுறைகளின் பலவீனமாக இந்த நிலையைப் பார்க்கலாம்.

மற்ற பல்வேறு மாநிலங்களில் இல்லாத அளவு தமிழகத்தில்தான் பிராமண ஆதிக்கம் பல்வேறு துறைகளில் முற்றாக தகர்க்கப்பட்டிருப்பதற்கு பெரியார்தான் காரணமெனில்,  அங்கிங்கெனாதபடி எங்கும்சாமியார்கள் சாமியாரிணிகள் ஆராதிக்கப்பட்டுவரும் சூழலுக்கும் பெரியாரியத்தைத்தான் பொறுப்பாக்கவேண்டும்.

பங்களிப்பு, பலவீனங்கள் இரண்டு பரிமாணங்களையும் நாம் பார்க்கவிருக்கிறோம்.

(தொடரும்)