செஹோர்: பிராமணர்களோ,சத்திரியர்களோ, வைசியர்களோ, அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எண்ணாதபோது, சூத்திரர்கள் மட்டும் கோபப்படுவது ஏன் என்று பிரக்யா தாக்கூர் பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மலோகனில் 2008ம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு ஒன்றில் 6 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இருச்சக்கர வாகனத்தில் வைத்து இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் பாஜக பிரக்யா சிங் தாக்கூர்.
சர்ச்சைக்குரிய பல விஷயங்களை தொடர்ந்து பேசி வருபவர். போபால் லோக்சபா தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிட்டு பிரச்சாரத்தின் போது நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்று நாடாளுமன்றத்தில் பேசி பின்னர் பெரும் சர்ச்சையில் சிக்கினார். வெளிநாட்டுத் தாயின் வயிற்றில் பிறந்த ஒருவரால் எப்படி தேசபக்தராக இருக்க முடியும் என்று ராகுல் காந்தியின் பெயரைச் சொல்லாமல் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்தார்.
இந் நிலையில், மத்திய பிரதேசம், செஹோர் நகரில் செய்தியாளர்களிடம் பிரக்யா தாக்கூர் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் நட்டாவின் பாதுகாப்பு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியது அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜி தான். இது இந்தியா, பாகிஸ்தான் அல்ல என்பதை அவர் புரிந்து கொண்டார்.
இந்தியாவை பாதுகாக்க இந்துக்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் அவருக்கு ஒரு பொருத்தமான பதிலடி கொடுப்பார்கள். அந்த மாநிலத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அங்கு ஓர் இந்து ராஜ்யம் அமையும். தனது ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது என்பதால் மமதா விரக்தியில் உள்ளார். அதனால் அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளது.
ஒரு சத்திரியரை நாம் சத்ரியர் என்று அழைத்தால் மோசமாக உணர மாட்டார். ஒரு பிராமணரை நாம் பிராமணர் என்று அழைத்தால் மோசமாக உணர மாட்டார். நாம் வைசியர்களை அவ்வாறு அழைத்தால் ஒரு வைசியர் மோசமாக உணர மாட்டார். ஆனால் ஒரு சூத்திரரை அழைத்தால் மட்டும் அவர் மோசமாக உணர்கிறார். காரணம் என்றால் அவர்களுக்கு அது புரியாது என்று பிரக்யா தாக்கூர் கூறினார்.