புதுடெல்லி:

மத நல்லிணக்கத்தைப் போற்றும் சர்ஃப் எக்ஸல் விளம்பரத்துக்கு வலதுசாரிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்துஸ்தான் யுனிலீவர் பொருட்களை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.


இந்துஸ்தான் யுனிலீவரின் சர்ஃப் விளம்பரம் மத நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாக இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒரு வாளியில் வண்ணப் பொடியை வைத்துக் கொண்டு, ஒரு சிறுமி மீது சிறுவர்கள் வீசி ஹோலி பண்டிகை கொண்டாடுகிறார்கள்.
வாளியில் உள்ள அனைத்து வண்ணங்களையும் தன் மீது வீச வைத்து, வெள்ளை குர்தா அணிந்து மசூதிக்கு தொழுகைக்கு போகும் சிறுவனை காப்பாற்றி சைக்கிளில் அழைத்துச் செல்கிறாள் சிறுமி.

அதையும் மீறி ஒரு சிறுவன் வண்ணம் கலந்த பலூனை தொழுகைக்கு செல்லும் அந்த சிறுவன் மீது அடிக்க முயற்சிக்கிறான். பக்கத்தில் இருக்கும் மற்றொரு சிறுவன் தடுக்கிறான்.

பாதுகாப்பாக சிறுவனை மசூதி அருகே விடுகிறாள் சிறுமி. உள்ளே சென்றவாறு, தொழுதுவிட்டு வருகிறேன் என்கிறான் அந்த சிறுவன்.
வா, வா உன் மீது வண்ணங்களை தெளிக்கிறேன் என புன்னகைத்தவாறு கூறுகிறாள் சிறுமி.

ஒரு விளம்பரத்தில் மத நல்லிணக்கத்தை இந்த அளவுக்கு பிரதிபலிக்க முடியுமா? என ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சர்ஃப் எக்ஸல் விளம்பரம் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது.
வலதுசாரி அமைப்பினர் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இந்துஸ்தான் யுனிலீவரின் பொருட்களை புறக்கணிக்கப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.