மும்பை

போரிவில்லியில் க்ரெடிட் கார்ட் மூலம் சீசன் டிக்கட் வாங்கிய பயணியிடம் ரூ.1333 க்கு பதில் ரூ. 1.3 லட்சத்துக்கு மேல் டிக்கட் விற்பனையாளரால் தவறுதலாக பெறப்பட்டுள்ளது.

ரெயில்வேயில் டிக்கட் புக் செய்வதற்கும்,  சீசன் டிக்கட் வாங்குவதற்கும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் தொகையை செலுத்தலாம் என்பது பயணிகளுக்கு நிம்மதியை அளித்தது.    ஆனால் அதுவே ஒரு பயணியின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது.

மும்பையை சேர்ந்த விகாஸ் மஞ்சேகர் போரிவில்லியில் ஒரு டிக்கட் கவுண்டரில் அந்தேரி=போரிவில்லி செல்ல முதலாம் வகுப்பு மூன்று மாத சீசன் டிக்கட் ஒன்றை வாங்கியுள்ளார்.   அவர் டிக்கட் விற்பனையாளரிடம் தனது கிரெடிட் கார்டை கொடுத்துள்ளார்.   அந்த சீசன் டிக்கட்டின் விலையான ரூ. 1333 க்கு பதில் அவர் தவறுதலாக ரூ. 1,33,330 வசூலித்து விட்டார்.   இதை கவனித்த விகாஸ் உடனடியாக ரெயில் நிலையத்தில் எழுத்து மூலம் புகார் கொடுத்தார்.   ரெயில் நிலைய அதிகாரிகள் அதை மேலிடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 4ஆம் தேதி நடைபெற்றுள்ளது.   இன்றுவரை அவருக்கும்  பணம் திருப்பித் தரப்படவில்லை.    இதை அவர் வங்கி அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.   ஆனால் வங்கி அதிகாரிகள் வரும் 24ஆம் தேதிக்குள் பணம் வரவில்லை எனில் இந்த பணத்திற்கான வட்டியாக சுமார் ரூ.4000-5000 வரை சேர்த்து செலுத்த வேண்டும் என கூறி விட்டனர்.

இது குறித்து மேற்கு ரெயில்வே யின் தலைமை அலுவலகம் உள்ள மும்பை செண்டிரல் பகுதிக்கு சென்றும் விகாஸ் முறையிட்டுள்ளார்.   அவர்கள் எப்போது பணம் திரும்ப வழங்கப்படும் என்பதை சொல்லவில்லை.   உடனடியாக அந்த டிக்கட் விற்பனையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறி அனுப்பி விட்டனர்.

விகாஸ், “ரெயில்வே ஊழியர்களின் மேல் நடவடிக்கை எடுப்பதை விட அவர்களுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் அட்டைகளை ஒழுங்காக பதிய சொல்லித்தர வேண்டும்.   அது மட்டும் இன்றி டிக்கட் விற்பனை இயந்திரத்தின் டிஸ்ப்ளே வெளியில் உள்ள பயணிகளுக்கு தெரியும்படி வைக்க வேண்டும்.   அதன் மூலம் தவறான தொகை பதியப்பட்டிருந்தால் உடனடியாக தெரிய வரும்”என கூறினார்.