மோடி தன்னுடைய டீக்கடை கதையை மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
முதல் சுற்றில் எடுபட்ட ஒரு ஏழை தன் கடின உழைப்பில் செல்வந்தனாகும் கதை. இதுபோன்ற கதை பல சூப்பர் ஸ்டார்களை உருவாக்கியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் காலங்காலமாய் பார்த்து சலித்த கதை தான் இது. சர்வர் சுந்தரம், தர்மதுரை, அண்ணாமலை, சூர்யவம்சம், மயக்கம் என்ன போன்ற திரைப்படங்களை நினைவு கூர்வோம். இப்படங்களில், கதாநாயகன் ஏழையாய் இருந்து, தன்னுடைய கடின உழைப்பால் பணக்காரன்/சாதனையாளன் ஆகும் உணர்ச்கிப்பூர்வமான கதை எப்பொழுதுமே வெற்றிப்படமாக ஓடியுள்ளது.
2014 -நாடாளுமன்றத் தேர்தலின் போது, திடீரென இந்தக் கதையை கையிலெடுத்தார் மோடி. ரயிலே அதிகம் வராத வாட் நகர் ரயில் நிலயதில், தன்னுடைய தந்தையின் டீக்கடையில் அவருக்கு உதவியாக டீ விற்றதாக கதை சொன்னார். அதனை அவரது பக்தர்கள் கண் காது மூக்கு வைத்து மீண்டும் மீண்டும் பகிர்ந்து, மக்களிடையே டீக்கடைகாரர் பிரதமராகும் அளவிற்க்கு கடுமையாக வாழ்வில் உழைத்து முன்னேறி உள்ளார். எனவே அவரை பிரதமர் ஆக்கி அழகு பார்போம் எனும் கதை மக்களிடம் எடுபட்டது. அவருக்கு செல்வாக்கு உயர்ந்து பிரதமர் நாற்காலியில் அமர வைக்கப் பட்டார். வழக்கமான திரைபடம் போலவே நிஜத்தில் நல்ல முடிவு கிடைத்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
இரண்டாவது சுற்று:
ஆனால், பிரதமர் பதவியில் இரண்டாண்டுகள் இருந்தப் பின் , தம்முடைய இரண்டாண்டு சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்காமல், மீண்டும் அதே ” டீக்கடை ஏழை-செல்வந்தன் ஆகும்” அறுந்த ரீலை கையில் எடுப்பது, அவரது பலவீனத்தையே காட்டுகின்றது. இந்தக் கதை இம்முறை யாரையும் உற்சாகப் படுத்தவில்லை. மாறாக கொட்டாவி வரவைக்கின்றது. ஏனெனில், இவரது கதை, ஒபாமா முதல், ராஹுல் காந்திக்கு டீ கொடுக்கும் சாமானியன் வரை னங்கு தெரிந்த கதையாக மாறிவிட்டது.
எனினும், அவ்வபொழுது மக்களுக்கு தாம் டீ விற்றக் கதையை நினைவுப் படுத்த மோடி தவறுவதில்லை.
வெளிநாட்டில் மேடிசன் ஸ்கொயரில் உரை யாற்றும்போது கூட அவர் இந்தக் டீ-கதையை மீண்டும் மக்களுக்கு நினைவுப் படுத்த தவறவில்லை. அங்கிருந்த குழந்தைகளிடம், தாம் டீ விற்கையில் ஹிந்தி கற்றுக்கொண்டதாகக் கூறினார்.
அவர் கூறும் கதைக்கரு சிறந்தது தான். அந்தக் கதையை கூறுபவரின் பேச்சாற்றல் அதைவிடச் சிறந்தது தான் எனினும். அஸ்ஸாமில் இப்படித்தான் தன் டீ விற்றக்கதையில் சுவாரசியங்களைச் சேர்த்து தாம் அஸ்ஸாம் டீ விற்றதாகக் கூறினார். இன்னும் எவ்வளவு சுவாரசியங்களை அவர் கூட்ட முயற்சித்தாலும், அது போரடிக்கும் விதமாகவே உள்ளது.
வைகோவின் கிரேக்க வரலாறு போன்றே, மோடியின் டீ வரலாறும் கேலிக்குரியதாய் மாறிவருவது கண்கூடு . ஒரு புதியக் கதையை யோசியுங்கள் பிரதமர் அவர்களே….