டெல்லி: எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா, சீனா இடையே இன்று 12-வது சுற்று பேச்சு அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற உள்ளது.
இந்திய, சீன ராணுவங்களுக்கு இடையே கிழக்கு லடாக் எல்லையில் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இதையடுத்து, இரு நாட்டு வீரர்களிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் பல சுற்று பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற தூதரக மட்டத்தில் பேச்சுவார்த்தையை அடுத்து பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து இரு தரப்பு படைகள் திரும்பப்பெறப்பட்டன. இருந்தாலும் சீனா முழுமையாக படைகளை வாபஸ் பெற மறுத்து வருகிறது.
இந்தியாவுடன் போர் ஏற்பட்டால் அதற்குள்ள தடைகளை நீக்கும் பொருட்டு கிழக்கு லடாக் அருகே சின்சியாங் மகாணத்தில் புதிய வான் தளத்தை சீனா அமைத்து வருகிறது. சீனாவின் கஸ்கர் மற்றும் ஹோதன் தளத்திற்கு இடையே இந்த புதிய தளம் வருகிறது.இ ந்த இரு தளங்களில் உதவியுடன் தான் சீனா தற்போது எல்லையில் வான்வழி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறது.இரண்டு தளங்களின் இடையே உள்ள இடைவெளியை குறைக்கும் பொருட்டு இந்த புதிய தளத்தை சீனா ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்பு படைகளுக்கு வழங்கப்பட்ட அவசரகால அதிகாரங்கள் நீட்டித்து இந்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த அதிகாரங்கள் மூலம் பாதுகாப்பு படைகள் தங்கள் அவசர தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
இதற்கிடையில், இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் இதுவரை 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் 3½ மாத இடைவெளிக்கு பின்னர் 12-வது சுற்று பேச்சுவார்த்தை இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, அசல் கட்டுப்பாட்டு கோட்டின் சீன பகுதியில் மால்டோ எல்லை முனையில் நடக்கிறது.
எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா பகுதிகளில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாக இன்றைய பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தப்படும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.