ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெறும்  ஈரோடு கிழக்கு தொகுதியில் பூத் சிலிப் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது. அதே வளையில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களுக்கான தபால்வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதுஆவரை 246 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடக்கிறது. இதில்,  தி.மு.க, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சைகள் என 46 வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இதையொட்டி, 53 இடங்களில், 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 9 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அவற்றிற்கு கூடுதல் பாதுகாப்பு மற்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, ஈரோடு மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியாக, கடந்த 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன்படி, மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவை தொகுதிகளில், 19 லட்சத்து 77 ஆயிரத்து 419 வாக்காளர்கள் உள்ளனர். இதில், புதியதாக 35 ஆயிரத்து 855 பேர் வாக்காளர்களாக சேர்க்கப்பட்டனர். மாவட்ட அளவில் புதிய வாக்காளர்கள் மற்றும் அடையாள அட்டையில் திருத்தம் கோரி விண்ணப்பித்த 49 ஆயிரத்து 295 வாக்காளர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 19 ஆயிரத்து 172 பேருக்கு புதிய அடையாள அட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் புதியதாக இணைந்த, புதிய வாக்காளர்கள் மற்றும் ஏற்கெனவே அடையாள அட்டை வைத்திருந்து, திருத்தம் மேற்கொண்ட வர்கள் என 1,500 பேருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு படிப்படியாக அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களது வாக்கினை செலுத்த தேர்தல் ஆணையம் சார்பில் வாகன வசதி செய்யப்பட உள்ளது. வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாத 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 256 பேர் வீடுகளில் இருந்து தபால் வாக்களிக்க 12 டி விண்ணப்பத்தை அளித்து இருந்தனர்.

இவர்களின் வீடுகளுக்கு சென்று தபால் வாக்கு பதிவு செய்ய 4 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் கடந்த 23-ம் தேதி தொடங்கி 24, 25-ம் தேதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக, தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இறுதிநாளான நேற்று மாலை நிறைவடைந்தது. மொத்தம் 246 பேர் தபால் வாக்கு அளித்துள்ளனர்.

பால் வாக்கு செலுத்த ஒப்புதல் அளித்து இருந்த 256 பேரில், 85 வயதுக்கு மேற்பட்ட 6 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், ஒரு வாக்காளர் இடமாறுதல் ஆனதாலும், 3 வாக்காளர்கள் மரணமடைந்ததாலும், மொத்தம் 10 வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை. தபால் வாக்குப்பதிவு முடிவில், 85 வயதிற்கு மேற்பட்ட199 பேர், 47 மாற்றுத்திறனாளிகள் என 246 வாக்காளர்கள் வாக்கு செலுத்தியுள்ளனர்.

மேலும் முதியோர்கள், மாற்றுத் திறநாளிகள்  வாகன வசதி வேண்டுவோர், 0424-1950மற்றும் 0424 – 2267674, 2267675,2267679, 96004 79643 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

அதுபோல, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, பூத்சிலிப் வழங்கும் பணி  தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் 33 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியை உள்ளடக்கியதாகும். இதில், வார்டு வாரியாக வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும் அலுவலர்கள், அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதித்து, அதன் அடிப்படையில் பூத் சிலிப் வழங்கி வருகின்றனர். இப்பணி பிப்ரவரி 1-ம் தேதி வரை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

 இதற்கிடையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றும்  1,194 அலுவலர்களுக்கு தேர்தல் தொடர்பாக இரண்டு கட்டமாக  பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் அலுவலர்கள்  வாக்குச்சாவடிகளில் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 3-ம் தேதி இறுதிக்கட்ட பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து,  அவர்கள் வாக்குச் சாவடிகளில் பணிபுரிவதற்கான ஆணை வழங்கப்படும். அதே நாளில், தேர்தல் பணியாற்றுவோர் தபால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை, ஈரோடு மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியும், ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா, மேற்கொண்டு வருகிறார்.