திருச்சி: அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி வீடு உள்பட திருச்சியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும்தனியார் நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும், சென்னையில், அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீப மாதங்களாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் புற்றீசல் போல அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள அரசு அலுவலகங்கள், முக்கிய தலைவர்கள் வீடு, பள்ளி கல்லூரிகள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று திருச்சியில் அமைச்ச்ரகள் வீடு, கல்லூரிகள் என பல இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
திருச்சியில் உள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு வீடு, அலுவலகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு, அலுவலகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
உடனே திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாநகர காவல் துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் தில்லைநகர் 5-வது கிராஸில் உள்ள அமைச்சர் கே .என்.நேரு வீடு மற்றும் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
தென்னூர் அண்ணா நகரில் உள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீடு மற்றும் சத்திரம் வி என் நகர் பகுதியில் அமைந்துள்ள திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்திலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் இது வெறும் புரளி என தெரிய வந்தது.
திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் கல்லூரி அலுவலக அறைகள் வகுப்பறைகள் ஆய்வறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் அங்கும் எந்த பிரச்சனையும் இல்லை. அமைச்சர்கள் வீடு மற்றும் அலுவலகம் தனியார் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில், அமைச்சர் சேகர்பாபு, பாடகி சின்மயி, பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்று தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு ஒரு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் இல்லத்திற்கும், திரைப்படப் பாடகி சின்மயி, பா.ஜ.க. நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டி ஆகியோரின் வீடுகளுக்கும் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக அந்தந்தப் பகுதிகளில் உள்ள வீடுகளில் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரச் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இருப்பினும், இந்த மிரட்டல் குறித்துப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.