சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்ந்து வரும் நிலையில், சென்னையில் உள்ள பிரபலமான  அண்ணா பல்கலைக் கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை, கோவை உள்பட பல மாவட்டங்களில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளுக்கு கடந்த சில மாதங்களாக இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சோதனை நடத்துவதில், அவை புரளி என்பது தெரிய வந்துள்ளது. இந்த இமெயில் மிரட்டல்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படுவதாக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  சென்னை கிண்டியில்  உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  இன்று (புதன்கிழமை)  காலை வெடிகுண்டு மிரட்டல்  மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டது. இந்த மிரட்டல் குறித்து பல்கலைக்கழக நிர்வாகம், காவல்துறைக்கு தகவல் அளித்தது. இதைத் தொடர்ந்து, காவல் துறையினர்  மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் சோதனை செய்தனர்.  இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு விடுத்த மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சமீபகாலமாக, சென்னை விமான நிலையம், தமிழக முதல்வர் சென்ற விமானம் என தமிழகத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.