கோயமுத்தூர்: கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று  மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 7 முறை இதுபோன்ற வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில், இன்று 8வது முறையாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் கடந்த 7 மாதங்களில் 342 வெடிகுண்டு மிரட்டல்! காவல்ஆணையர் அருண் கூறியிருந்தார். இந்த நிலையில், கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று 8வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று  காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக முகவரிக்கு  வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வெடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து கலெக்டர் அலுவலக ஊழியர், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு செயல் இழப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் அயன் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் கலெக்டர் அலுவலக வளாகம் முழுவதும் போலீசார் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அனைத்து அறைகளிலும் சல்லடை போட்டு தேடினர். ஒரு மணி நேரம் சோதனை நடந்த நிலையில், வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. எனவே மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இ-மெயில் வந்த முகவரியை வைத்து அவர் யார்? எங்கிருந்து வந்தது? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி மிரட்டல் வருவதால், போலீஸ் சோதனை நடத்துவதும் ஊழியர்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பணிகளும் பாதிக்கப்படுவதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.