ஜம்மு
இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது.
காஷ்மீர் மாநிலத்தில் இரு ஆண்டுகளுக்கு முன்பு விதி எண் 370 விலக்கப்பட்டு அம்மாநிலத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதனால் அங்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
தற்போது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பி வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த பிரதேசத்துக்குத் தேர்தல் நடத்துவது மற்றும் மாநில அந்தஸ்து அளிப்பது குறித்து இரு தினங்களுக்கு முன்பு டில்லியில் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்தி உள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை ஜம்மு விமான நிலையத்தில் இரு இடங்களில் குண்டு வெடித்துள்ளது. விமான நிலையத்தில் விமானப்படை தொழில்நுட்ப பிரிவு இயங்கி வரும் பகுதியில் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது, இந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
குண்டு வெடிப்பில் சிலர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன. இந்த குண்டு வெடிப்புக்கு யார் காரணம் என விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஜம்முவின் வேறொரு பகுதியில் 5 கிலோ வெடிபொருளுடன் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான். விமான நிலைய குண்டு வெடிப்பு குறித்து அவனிடமும் விசாரணை நடைபெறுகிறது.