மும்பை
இந்திய பாஸ்போர்ட்டுக்கு இப்போது தான் விண்ணப்பம் செய்துள்ளதாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிரபல கதாநாயகர்களில் அக்ஷய் குமார் ஒருவர் ஆவார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் வில்லனாக நடித்துப் புகழ் பெற்றுள்ளார். இவர் சமீபகாலமாக மிகவும் தேசியத் தன்மை கொண்ட படங்களான கோல்ட், ஏர் லிஃப்ட், கேசரி போன்ற படங்களில் நடித்து வருகிறார். தேர்தலுக்கு முன்பு இவர் பிரதமர் மோடியைப் பேட்டி கண்டார்.
ஆனால் மும்பையில் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி அன்று நடந்த வாக்கெடுப்பில் அக்ஷய் குமார் பங்கேற்கவில்லை. இது குறித்து கடும் சர்ச்சை எழுந்தது. அவர் கனடா நாட்டு குடியுரிமை உள்ளதாகவும் அதனால் அவர் இந்தியத் தேர்தலில் வாக்குப் பதிவு செய்யவில்லை எனவும் கூறப்பட்டது. அத்துடன் அவர் கனடா பாஸ்போர்ட் மூலமாகவே பல வெளிநாடுகளுக்குச் சென்று வந்ததாகவும் அவரிடம் இந்திய பாஸ்போர்ட் கிடையாது எனவும் சொல்லப்பட்டு வந்தது.
சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வில் அக்ஷய் குமார், “என்னிடம் கனடா நாட்டுக் குடியுரிமை உள்ளது உண்மையாகும். இது பல வருடங்களுக்கு முன்பு நடந்தது. ஆரம்பக் காலத்தில் நான் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தன. இவ்வாறு 14 படங்கள் தோல்வி அடைந்ததால் நான் எனது நண்பரின் ஆலோசனைப்படி நான் கனடா நாட்டில் சென்று பணி புரிய நினைத்தேன். அப்போது கனடா குடியுரிமை மற்றும் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து அவை கிடைத்தன.
ஆனால் அப்போது வெளியான எனது திரைப்படம் வெற்றி அடைந்து எனக்கு வாய்ப்புக்கள் பெருகின. அதன் பிறகு நான் கனடா நாட்டில் பணி புரிவது குறித்து எண்ணவே இல்லை. அத்துடன் எனக்கு இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும் எண்ணவில்லை. நான் இப்போது தான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன்.
நான் இந்தியன் என்பதை நிரூபிக்க என் இந்தியப் பாஸ்போர்ட்டை காட்ட வேண்டும் எனப் பலரும் கேட்பது எனக்கு மன வருத்தம் அளிக்கிறது. இனியும் என்னை இவ்வாறு கேட்க இடம் அளிக்கக் கூடாது என நினைத்து நான் இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளேன். நான் எனது மனைவிக்குக் கனடா நாட்டுக் குடியுரிமையைப் பெற முயலவில்லை. அவர் ஒரு இந்தியப் பெண். எனது மகனும் இந்தியன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்தியர்கள். நான் இந்தியாவில் வரி செலுத்தி இங்கு வாழ்பவன்.
நான் கனடா நாட்டில் கவுரவ குடியுரிமை பெற்றுள்ளேன். அதை நான் என்றும் மறைத்ததில்லை. எனக்குக் கவுரவ டாக்டர் பட்டம் கூட அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் அதைக்கொண்டு யாருக்கும் சிகிச்சை அளிக்க முடியாது. அதைப் போலவே இதுவும் என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.