சுக்ரே, பொலிவியா

பொலிவியா நாட்டு அதிபர் இவோ மாரல்ஸ் தமக்கு எதிராக நடக்கும் மக்கள் போராட்டம் காரணமாகப் பதவி விலகி உள்ளார்.

கடந்த மாதம் 20ம் தேதி தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் (சோசலிச இயக்கம்), முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலில் மொத்தம் 88.31 சதவீத வாக்குகள் பதிவானது.

அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அதிபர் இவோ மாரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவித்தது.  ஆனால் இந்த தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட அக்டோபர் 25ம் தேதிக்கு முன்தினமே தான் வெற்றி பெற்றதாக இவோமாரல்ஸ் அறிவித்திருந்தார்.  எனவே இந்த முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை.

அவர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.   பொலியா நாட்டின் வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் மக்களின் போராட்டங்கள் நடைபெற்றன. அத்துடன் அதிபர் இவா மோரல்ஸ் அவசர கூட்டத்தை நடத்த வேண்டி, மீண்டும் நாடு தழுவிய போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன.

இந்த போராட்டத்தில் பொதுமக்களுடன் காவல்துறையினரும் கலந்துக் கொள்ளத் தொடங்கினர்.  இதனால் போராட்டத்தை கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.  அதையொட்டி அதிபர் இவோ மாரல்ஸ் மற்றும் துணை அதிபர் அல்வாரோ கார்சியோ ஆகிய இருவரும் பதவி விலகுவதாக நேற்று அறிவித்துள்ளனர்.