மைடுசூரி

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகள் 110 விவசாயிகளைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றுள்ளனர்.

நைஜீரியா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.  இங்கு நிலவும் மோசமான பொருளாதார சூழ்நிலையால் மக்கள் உணவுக்கும் வழியின்றி வசித்து வருகின்றனர்.   கட்னத 2009 ஆம் ஆண்டில் இருந்து நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போகோ ஹராம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி அக்கு ஐஎஸ் அமைப்பினை நிறுவ முயன்று வருகின்றனர்.   இதையொட்டி அரசுத் தரப்புக்கும் போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர்.  பொதுமக்கள் தங்களைப் பற்றிய தகவல்களை அரசுக்கு தருவதாகச் சந்தேகிக்கும் போகோ ஹராம் அமைப்பினர் அடிக்கடி மக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  அவ்வகையில் நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் இருந்து வடகிழக்கு பகுதிக்கு வந்து பணி புரியும் விவசாயக் கூலிகள் மீது சமீபத்தில் தாக்குதல் நடந்துள்ளது.

நைஜீரிய நாட்டில் போர்னா மாகாண தலை நகர் மைடுசூரி அருகே உள்ள கோசிப் என்னும் சிற்றூரில் விவசாயக் கூலிகள் பணி புரிந்துள்ளனர்.  அந்த நேரம் அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள் அந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.  அங்குள்ள 110 விவசாயிகளைக் கடத்திய பயங்கரவாதிகள் அவர்களை கட்டிப்போட்டு அவர்கள் தலையைத் துண்டித்து உடல் உறுப்புக்களை அறுத்து சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

இந்த நிகழ்வு நைஜீரியாவை மட்டுமின்றி உலக மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.  இந்த கொடூர செயலுக்கு நைஜீரிய ஜனாதிபதி முகமது புகாரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐநா சபையின் ஒருங்கிணைப்பாளர் எட்வர்ட் கல்லோன் இந்த செயலை கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.