மும்பை
இஸ்லாமிய போரா பிரிவின் தலைவர் இந்திய முறை கழிப்பறையை மட்டுமே உபயோகப் படுத்த வேண்டும் எனக் கூறியதை அடுத்து ஜமாத்தினர் மேற்கத்திய முறை கழிப்பறைகள இடித்து வருகின்றனர்.
இஸ்லாமியர்களில் ஷியா மற்றும் சன்னி என இரு பிரிவினர் உள்ளனர். இந்த ஷியா பிரிவின் ஒரு உட்பிரிவில் உள்ளவர்கள் போரா என அழைக்கப்படுகின்றனர். இந்தப் பிரிவின் முழுப் பெயர் தாவூதி போரா ஆகும். இவர்கள் இந்தியாவின் மேற்குப் பகுதிகளிலும் பாகிஸ்தானின் சில பகுதிகளிலும் வசித்து வருகின்றனர். இந்தப் பிரிவினரின் தலைவர் சையத்னா முஃபாதல் சைஃபுதீன் ஆவார்.
இவர் சில தினங்களுக்கு முன்பு இந்திய முறையில் உள்ள கழிப்பறையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் மேற்கத்திய முறை கழிப்பறை வைத்துள்ளவர்கள் உடனடியாக அதை மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக போரா பிரிவின் ஜமாத்தினர் வீடு வீடாக சென்று கழிப்பறை சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கத்திய முறையில் அமைந்துள்ள கழிப்பறைகள் வைத்திருந்தால் அங்கேயே அதை இடித்துத் தள்ளி விடுகின்றனர். இவ்வாறு இடித்துத் தள்ளும் ஒரு வீடியோ இஸ்லாமியரிடையே வைரலாகி வருகிறது.
இது குறித்து சில இஸ்லாமியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களில் பெயர் தெரிவிக்க விரும்பாத 50 வயது இஸ்லாமியர் ஒருவர், “எங்கள் வீட்டில் இருவகையான கழிப்பறைகளும் உள்ளது. ஆனால் ஜாமத் சோதனையிடும் போது நாங்கள் இந்திய முறை கழிப்பறையை மட்டுமே காட்டினோம். சையத்னா சொல்வது சுகாதார முறைப்படி சரியானதுதான். ஆனால் எனது வயதான பெற்றோர்களுக்கு மேற்கத்திய முறை கழிப்பறைதான் வசதியானது” என கூறி உள்ளார்.
மற்றொரு இஸ்லாமியர், “கடந்த வாரம் இது போல இந்திய முறை கழிப்பறை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் என சையத்னா கூறி உள்ளார். ஆனால் அதை இவர் சுமார் 10 அல்லது 15 ஆண்டுகள் முன்பு சொல்லி இருக்க வேண்டும். தற்போது கட்டப்பட்டுள்ள வீடுகளில் மேற்கத்திய முறை கழிப்பறை மட்டுமே உள்ளன. நாங்கள் அதை உபயோகித்து பழகி விட்டோம். இப்போது திடீரென மாற்றுவது மிகவும் கடினமான காரியம். அவர் சொல்வது சுகாதார முறைப்படியும் சுலபமாக மலம் கழிக்கவும் வசதியான ஒன்றுதான். ஆனால் இப்போது அதை சொல்வது தவறு.” எனக் கூறி உள்ளார்.
இஸ்லாமிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், “மேற்கத்திய முறை கழிப்பறை என்பது நம் நாட்டு வழக்கத்துக்கு முற்றிலும் மாறானது. எனவே அதை உபயோகப் படுத்த வேண்டாம் என்பது ஒரு யோசனை மட்டுமே. அதற்காக ஜமாத்தை சேர்ந்தவர்கள் வீடு வீடாக சோதனை இடுவதும் கழிப்பறையை இடிப்பதும் தவறான செயல். இரு தினங்களுக்கு முன்பு ஜமாத்தினர் ஒரு பெண்ணின் வீட்டில் கழிப்பறையை சோதனை இட்டு இடிக்க முயன்ற போது அவர் காவல்துறையை அழைப்பதாகச் சத்தம் போட்ட பின்பே அங்கிருந்து சென்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.