உத்திர பிரதேச மாநிலம் ப்ரயாக்ராஜ் (அலஹாபாத்) நகரின் அருகில் உள்ள கங்கை நதியில் மீண்டும் சடலங்கள் மிதந்து செல்வது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கங்கைகரையோர கிராமங்களில் வசிப்பவர்கள் காலம்காலமாக கரையோரத்தில் உள்ள மயானங்களில் பிணங்களை எரிப்பதும் புதைப்பதும் வழக்கம்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா பரவல் நிலவிவரும் நிலையில் இரண்டாம் அலையில் உ.பி.யில் சாரைசாரையாக பிணங்கள் எரியூட்டப்பட்ட நிகழ்வுகள் அரங்கேறின.
இரண்டு மாதங்களுக்கு முன் சடலங்களை எரியூட்டக்கூட பணமும் நேரமும் இல்லாமல் வீசி சென்ற பிணங்கள் கங்கை நதியில் மிதந்தன.
இந்த விவகாரம் நாடு முழுவதும் சர்ச்சையானதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் இதனை கண்காணிப்பதாக கூறியது.
இந்நிலையில் இப்போது உ.பி. பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் கங்கை நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது, அதனால் கரையோரங்களில் புதைக்கப்பட்ட பிணங்கள் ஆற்று நீரில் அடித்து இழுத்து செல்லப்படுகின்றன.
இதுகுறித்த வீடியோ பதிவுகளை வெளியிட்ட உள்ளூர் செய்தியாளர்கள். பல சடலங்கள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு துணிகளால் சுற்றபட்டிருப்பதாகவும், புதிதாக புதைக்கப்பட்டது போன்றும் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
கங்கைகரையில் பிணங்களை புதைப்பது தொடர்ந்து நடைபெறும் வழக்கமென்றாலும் இதற்கு முன் இதுபோன்று சடலங்கள் மிதந்து சென்றதில்லை என்று கூறுகிறார்கள்.
மேலும் கரையோரம் உள்ள மயானம் தவிர கரை நெடுகிலும் குவியல் குவியலாக சடலங்களை கொண்டு வந்து புதைப்பதால் தான் இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக கூறும் இவர்கள் மழை தீவிரம் ஆனால் கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது நிலைமை இன்னும் விபரீதமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.