சென்னை: மெரினாவில் படகு சவாரி, முட்டுக்காட்டில் படகுடன் உணவகம், ராமஸ்வரம் கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சேவை உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 13ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் ஆகஸ்டு 20ந்தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற சுற்றுலா துறை மானிய கோரிக்கை தொடர்பான விவாததத்தைத் தொடர்ந்து அமைச்சர் மா.மதிவேந்தன் ஆகியோர் பதிலுரை நிகழ்த்தி, துறை சார்ந்த புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி,
உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து (royal madras yacht club) மோட்டார் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்
முட்டுக்காடு படகு இல்லத்தில் மிதவை படகுடன் கூடிய உணவகம் அமைக்கப்படும்.
ஜவ்வாது மலைப் பகுதி பல்வேறு வசதிகளுடன் கூடிய சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
ராமேஸ்வரம் – கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் படகு சேவை தொடங்குவது பற்றி ஆய்வு செய்யப்படும்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தலம் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை இரவில் கண்டுகளிக்கும்படி ஒளியூட்டப்படும் உள்பட 30 அறிவிப்புகளை வெளியிட்டார்.