இதை கேள்வியுற்ற மாநகராட்சி அதிகாரிகள் கடுப்பாகி, பொதுவான சாலைக்கு தடை ஏற்படுத்தச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கூறி, அவர்களின் கோரிக்கையை நிராகரித்துள்ளனர்.
சென்னையில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், பெரும்பாலான குடியிருப்புவாசிகள் அச்சத்துடனே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், அர்சானிக்ஆல்பம் போன்ற மருந்துகளை எடுத்து வருகின்றனர். வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து செல்கின்றனர்
இந்த நிலையில், சென்னையில் பெரும் மிகப் பெரிய செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியான சென்னை போட் கிளப் பகுதியில், இந்தியா சிமென்ட்ஸ் என் சீனிவாசன், டிவிஸ் குழும அதிபர்கள், சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், முருகப்பா, எம் ஆர் எஃப் குழும அதிபர்கள் என மெகா புள்ளிகள் வசித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா அச்சம் நிலவுவதால் இங்கு வசிப்போர் யாரும் வீட்டை விட்டே வருவதில்லை என்பதால் சாலைகள் காலியாக உள்ளன. (பொதுவாகவே இங்குள்ளவர்கள் யாரும் சாலையில் காணப்படுவது இல்லை) இதனர்ல் அந்த பகுதியில் சிலர் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஏராளமானோர் அந்தபகுதியில் வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இதையறிந்த அந்த பகுதி குடியிருப்போர் சங்க தலைவர் அப்பாசாமி, தங்களது பகுதியில் வசிக்காத பலர் இந்த பகுதியில் நடமாடுவதாகவும், அறிமுகமற்றோரின் வாகனங்கள் வருவதாகவும், இதனால் தங்களது பகுதிக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது எனவே, எங்களது பகுதியில் உள்ள சாலை நுழைவாயிலில் ஒரு பெரிய கேட் அமைத்து சாலைக்குள் வெளியாட்கள் வருவதைத் தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த தகவல் சமுக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. சாலைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கானது. இதில் அவர்களுடைய மேல் தட்டு மனப்பான்மையைக் காட்டக்கூடாது என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இந்த நிலையில், போட் கிளப் செல்வந்தர்களின் கோரிக்கையை சென்னை மாநகராட்சி ஆணையர் நிராகரித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், ஒரு சில குடியிருப்பாளர் களுக்கு சிறப்பு வசதி அளிக்க இதுபோன்ற தனி கேட்களை அனுமதிக்க முடியாது, போட் கிளப் குடியிருப்பாளர் களின் புரிதல் தவறானது, “குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக அவர்களின் வீடுகளில் இருந்து கொள்ள வேண்டும், அவர்களால் சாலைகளில் செல்லும் மக்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த முடியாது. அத்தகைய சிறப்பு சலுகைகள் ஏதும் சட்டத்தில் இல்லை” என்று ஒரே போடாக போட்டுள்ளார்.
(இநத விவகாரம் காரணமாக விரைவில் மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் மாற்றப்படலாம்)