சென்னை
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் உள்ள ரயில்களிலும் நீல நிறத்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாதவரம் முதல் சிப்காட், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி மற்றும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 116 கிமீ நெட்வொர்க்கை ₹61,843 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி வரும் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு மொத்தம் 138 மூன்று பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத ரயில்கள் தேவைப்படும். இவற்றில் ஆரம்ப சில ஆண்டுகளில் 3 பெட்டிகளும் பிறகு அனைத்து வழித்தடங்களும் செயல்படத் தொடங்கும் போது மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, தேவைக்கு ஏற்ப ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
மெட்ரோ ரயில் அதிகாரிகளின் கூற்றுப்படி ஆரம்பத்தில் மற்ற வண்ணங்களைப் பயன்படுத்தத் தயாராக இருந்து, இறுதியில் ஒரே சீரான தன்மைக்காக நீல நிறத்தைத் தேர்வு செய்துள்ளனர். அதிகாரி ஒருவர் “ரயில்களின் நடைமேடைகளில் பச்சை, நீலம், ஆரஞ்சு மற்றும் சிவப்பு கோடுகளை வரையலாம் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் அனைத்து ரயில்களும் ஒவ்வொரு நடைபாதையிலும் இயக்கப்படும் என்பதால் இது பொருந்தாது.
தவிர ஏற்கனவே நீல நிற ரயில்கள் பிரபலமாக இருந்ததாலும், சென்னை மெட்ரோ ரயில் அமைப்புக்கு ஒத்ததாக இருந்ததாலும், நாங்கள் அதை கடைப்பிடிக்க முடிவு செய்தோம், ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
மெட்ரோ ரயில் அதிகாரிகள் சில வாரங்களில் இறுதி பதிப்பைச் சமர்ப்பிக்க உள்ளனர். தற்போதைய நெட்வொர்க்கில் பெண்களுக்கென பிரத்தியேகமாக ஒரு பெட்டியைக் கொண்ட நான்கு பெட்டிகள் கொண்ட ரயில்கள் உள்ளன, ஆனால் இரண்டாம் கட்டத் திட்டத்தின் மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களில் பெண்களுக்காக ஒரு பெட்டியின் பாதியை வரையறுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இவ்வாறு மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களில் சுமார் 900 பயணிகள் பயணிக்க முடியும், ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்களில் சுமார் 1,600 பேர் பயணிக்க முடியும். அடுத்த அண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான முதல் ரயில் நகரை வந்தடைய வாய்ப்புள்ளதால் அதன் பிறகு சோதனைகள் விரைவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.