மும்பை

புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு கோட்டாவை சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி முர்தாசா அல் ரூ.110 கோடி நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டாவை சேர்ந்த முர்தாசா அலி பிறவியிலேயே 95% பார்வை திறன் அற்றவர் ஆவார். அவருக்கு தற்போது 44 வயதாகிறது. இவர் கோட்டாவில் உள்ள கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஆவார். தற்போது இவர் மும்பையில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணி புரிந்து வருகிறார். இவர்குடும்பத்தினர் ஆடோமொபைல் விற்பனையாளர்கள் ஆவார்கள்

கடந்த 2010 ஆம் வருடம் ஜெய்ப்பூரில் ஒரு பெட்ரோல் பங்க் வெடித்து பெரும் விபத்து ஏற்பட்டது. அப்போது முர்தாசா அலி மீண்டும் இது போல நிகழ்வு நடைபெறாமல் இருக்க ஃப்யூயல் பர்ன் ரேடியேஷன் டெக்னாலஜி என்னும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை கண்டு பிடித்துள்ளார். இதன் மூலம் எந்த ஒரு வாகனமும் மற்றொரு வாகனத்தின் மீது மோத வரும் போது அதன் எரிபொருளை நிறுத்தி விபத்தை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தொழில்நுட்பத்துக்கு உரிமம் பெற பல வருடங்களாக முர்தாசா அலி முயற்சி செய்து வருகிறார். ஆனால் அரசு இதுவரை அவருக்கு எவ்வித பதிலும் அளிக்காமல் உள்ளது. இந்த முறையை அரசு அங்கிகரித்திருந்தால் புல்வாமா தாக்குதல் நடைபெற்று நாம் நமது 40 வீரர்களை இழந்திருக்க மாட்டோம் என அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் புல்வாமாவில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்ததால் மிகவும் மன வருத்தம் அடைந்துள்ளார். ஆகவே தான் இது வரை சேர்த்து வைத்துள்ள பணமான ரூ.110 கோடியை நிதியாக அளிக்க திட்டமிட்டு இது குறித்து பிரதமரை சந்திக்க கடந்த மாதம் 25 ஆம் தேதி அன்று நேரம் கேட்டுள்ளார்.

பிரதரின் தேசிய நிவாரண நிதித் துறை துணை செயலர் அக்னிகுமார் தாஸ் இவரைப் பற்றிய விவரங்களை கேட்டறிந்துள்ளார். இந்த மாதம் 1 ஆம் தேதி அன்று இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் வந்துள்ளது. அந்த பதிலில் விரைவில் முர்தாசா அலிக்கு பிரதமரை சந்திக்க நேரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.