புதுடெல்லி:
பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கடந்த ஒருமாதத்துக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை மிகக் கடுமையாக அதிகரித்துவருகிறது. தமிழகத்தில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 93 ரூபாயை எட்டியுள்ளது. இந்தியாவில், ராஜஸ்தான் உள்ளிட்ட சில மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது. அதனால், சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்து சென்னையில் தொழிலதிபர்கள் வியாபாரிகள் ஆகியோருடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், பெட்ரோல் விலை உயர்வுக்கு மத்திய அரசு மீது பழிபோட்டால் போட்டுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.

பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த முடியுமா? என்பது மகா பயங்கர தர்ம சங்கடமான கேள்வி என்று தெரிவித்த நிர்மலா சீதாராமன், ஆயில் நிறுவனங்கள் நினைத்தால் விலையை குறைக்க முடியும். எங்கள் கையில் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்துக்கு மாநிலம் பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது என்பது உண்மையே. எல்லாம் மாநிலமும் ஒத்துழைப்பு தந்தால் ஜி.எஸ்.டிக்கு கீழ் பெட்ரோல் விலையை கொண்டு வர முயற்சி மேற்கொள்ள இயலலாம்’என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.