திருச்சி: அமைச்சர் செஞ்சி மஸ்தானை அவமதித்த அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என்று பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் அறிவித்து உள்ளார்.
சமீபத்தில், விழுப்புரம் மந்தக்கரை பகுதியில் தி.மு.க., கூட்டணி சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அரங்கிற்கு வந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, ‘ இந்த மாவட்டத்தில் உனக்கு என்ன வேலை ‘ என கேட்டபடி, மஸ்தானிடம் இருந்த மைக்கை பிடுங்கினார். இதனால் இருவருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது. சபை நாகரிகம் அறிந்து பேசுங்க என மஸ்தான் கூறினார். எல்லாம் எனக்கு தெரியும் என பொன்முடி கோபமாக பேசினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மஸ்தான் சிறிது நேரத்தில் அங்கிருந்து வெளியேறினார். இது கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்கு இஸ்லாமிய அமைப்பனிர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அமைச்சர் பொன்முடியின் அநாகரிக நடவடிக்கை குறித்து கடுமையாக விமர்சித்துள்ள முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு, அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவருக்கு எதிராக கருப்புகொடி காட்டுவோம் என்று எச்சரித்து உள்ளார்.
இதுகுறித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகம் தொடர்ந்து திமுக அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அரணாக முதல்வர் ஸ்டாலின் இருந்து வருகிறார்.
நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கியதை வரவேற்கிறோம். ஆனால் தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக, அதிமுக, காங்கிரஸ் அனைத்தும் பாஜக அஜெண்டாவை செயல் படுத்துகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்திருப்பது வருத்தமளிக்கிறது,
விழுப்புரம் மந்தகரை இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசிய போது அமைச்சர் பொன்முடி மைக்கை பறித்து அவமரியாதையாக பேசியுள்ளார்.
இஸ்லாமிய சமுதாயம் நடத்தக்கூடிய நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி இவ்வாறு நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது. இதற்காக அமைச்சர் பொன்முடி மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் பதவி ஏற்றது முதல் சர்ச்சையாக பேசி திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிக்கல் ஏற்படுத்துகிறார்.
தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்கள் வாக்கு வங்கியை திசை திருப்பி விழுப்புரம் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக்குமாரை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் பொன்முடி செயல்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது.
அவர் உடனடியாக மன்னிப்பு கேட்கவில்லை என்றால் முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தின் சார்பில் விழுப்புரத்தில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு கூறியுள்ளார்.
நன்றி: inewstamil.com