திருவனந்தபுரம்
பாஜக அரசு எடுத்த தவறான பணமதிப்பிழப்பு முடிவால் வேலை இன்மை அதிகரித்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ஆம் வருடம் பிரதமர் மோடி நவம்பர் மாதம் 8 ஆம் தேதி அன்று இரவு பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்தார். இதனால் உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லாதவை ஆகின. இதையொட்டி பலரும் பல்வகை துயருக்கு ஆளாகினர். இது ஒரு அவசர கதியில் எடுக்கப்பட்ட தவறான முடிவு எனப் பல பொருளாதார நிபுணர்கள் கடுமையாக இன்னும் விமர்சித்து வருகின்றனர்.
நேற்று கேரளாவில் நடந்த ஒரு விழாவில் முன்னாள் பிரதமரும் பிரபல பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் காணொலி மூலம் கலந்து கொண்டார். அவர் தனது உரையில், “தற்போது பெரிதும் பாதிப்பு அடைந்துள்ள சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தற்காலிக நடவடிக்கைகளால் எவ்வித பயனும் பெறவில்லை என்பதை அரசு மறைக்க முயல்கிறது.
மற்ற மாநிலங்களைப் போல் கேரளாவிலும் தற்போது பொது நிதி ஆதாரங்கள் அதிகமான கடன் சுமையால் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளன. இந்தியப் பொருளாதாரத்துக்கு அடிப்படையான கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளுடன் கலந்தாய்வு போன்றவற்றை மத்திய அரசு நடத்துவதில்லை. இதனால் பல மாநிலங்களுக்குத் தேவையான பெரிய அளவிலான உதவிகளை மாநில அரசுகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மாநிலங்கள் தற்போது பல தடைகளை எதிர்கொண்டு முன்னேற வேண்டி உள்ளது. கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள உலக பொருளாதார வீழ்ச்சி மேலும் 2 அல்லது மூன்று வருடங்களுக்குத் தொடரும். மற்ற மாநிலங்களைப் போல் கேரளாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல தொழில்கள் கொரோனா பாதிப்பால் முடங்கி உள்ளதால் கேரள மாநிலத்துக்குத் தொழில் துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கு புதிய பணிகளை அளிக்க நடவடிக்கை எடுப்பதில் கேரள அரசு முன்னுரிமை அளிக்க வேண்டி உள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் பாஜக அரசு எடுத்த தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை முடிவால் வேலை இன்மை ஏற்பட்டது. அது இன்னும் சரியாகவில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பும் வேலை இன்மையை மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது அதிகரித்து வரும் வெளிநாட்டு முதலீடுகளைப் பயன்படுத்தி அனைவருக்கும் வேலை என்னும் திட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் இது. ஆனால் அதைக் கேரள அரசு செய்யவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைமையில் உள்ள ஐக்கிய ஜனநாயக அணி இதற்காக முந்தைய மக்களவை தேர்தலில் நியாய் என்னும் திட்டத்தை அறிவித்து ஏழைமக்களுக்கு உதவ முன் வந்தது.
ஏழைகளுக்கு உதவும் வகையில் உள்ள திட்டங்கள் மூலம் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
இந்த திட்டங்கள் மூலம் குறிப்பாகச் சிறு மற்றும் குறுந்தொழில்கள் வளர்ச்சி அடையும். இதன் மூலம் பல அமைப்பு சார தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். இவ்வாறு வேலை கிடைப்பதால் பொருளாதாரம் நல்ல வளர்ச்சியைக் கண்டு மீண்டும் வழக்கமான நிலையை அடையும்” எனக் கூறி உள்ளார்.