ஃபைசாபாத், உ. பி.

யோத்தி நகர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பா ஜ க அந்நகரின் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல இடங்களில் தோற்றுள்ளது.

தற்போது நடந்து முடிந்த உத்திரப் பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தலில் பா ஜ க அதிக இடங்களைக் கைப்பற்றி உள்ளது.  அவற்றில் அயோத்தியா நகராட்சியும் ஒன்றாகும்.  மின்னணு வாக்கு இயந்திரத்தின் மூலம் மோசடி செய்து பா ஜ க வெற்றி பெற்றுள்ளது என்பது தவறு என இந்தத் தேர்தலில் நிரூபணம் ஆன போதிலும் வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்ற இடங்களில் சில இடங்களில் பா ஜ க தோல்வியை தழுவி உள்ளது.  இது குறித்து “தி ஒயர்” செய்தி நிறுவனம் ஒரு ஆய்வு செய்துள்ளது.  அந்த ஆய்வில் அயோத்தியை ஒட்டியுள்ள ஏழு மாவட்ட தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

நகர மற்றும் கிராமப் பகுதிகளான ஃபைசாபாத்,  அம்பேத்கார் நகர், பச்தி, கோண்டா பல்ராம்பூர், பஹாரிச் மற்றும் சுல்தான்பூர் போன்ற இடங்களில் பா ஜ க வெறும் ஆறு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  அந்த பகுதியில் சமாஜ்வாதி கட்சி 12, பகுஜன் சமாஜ் கட்சி 5 காங்கிரஸ் 3 மற்றும் சுயேச்சைகள் 7 என வெற்றி பெற்றுள்ளனர்.

அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் நகரசபை தலைவர்களாக ஐந்து இடங்களிலும் பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர்.  அயோத்யா நகரின்  மேயர் பகுதியை வென்ற பா ஜ க சுற்றுப்புறப் பகுதிகளில் தலைவர் பதவியை இழந்துள்ளது.  இங்கு பா ஜ க வை சேர்ந்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருப்பது குறிப்பிடத் தக்கது.  இதே போல ஃபைசாபாத், பிகாபூர், பத்சாரா, கோசைகஞ்ச் ஆகிய நகரங்களில் தலைவர்களாக சமாஜ்வாதி கட்சியினர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

இதன் மூலம் மீண்டும் மின்னணு வாக்கு இயந்திரம் மற்றும் வாக்குச் சீட்டு முறை ஆகியவைகள் பற்றிய விவாதம் மீண்டும் துவங்கலாம் என கருதப்படுகிறது.

இவ்வாறு அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.