சென்னை:
கர்நாடகாவில் பாரதியஜனதா கட்சி வெற்றி பெற கிராமங்களில் பண மழை பொழிந்தது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம் சாட்டி உள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. அங்கு தொங்கு சட்டமன்றம் அமையும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்து வந்த நிலையில், 120க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை வகித்து, ஆட்சியை பிடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சியினர் கிராமங்கள் தோறும் பணத்தை அள்ளி வீசினர் என்றும், தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடக வந்த பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள் கர்நாடகாவில் கிராமம் கிராமமாக சென்று பணமழை பொழிந்தார்கள்… இதன் காரணமாகவே பாஜக முன்னிலையில் உள்ளது என்று கூறினார்.
மேலும், கேரளா போல, கர்நாடகாவில் காங்கிர1 ஆட்சி நன்றாக இருந்தாலும், அங்குள்ள மக்கள் மாற்றி மாற்றி ஆதரவு தருகிறார்கள்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தோல்விக்கு முக்கிய காரணம், கர்நாடக காங்கிரஸ் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை என்றும், ஒற்றுமையுடன் செயல்பட்டிருந்தால் தேர்தலில் கூடுதல் இடங்களை பெற்றிருப்போம் என்றும் கூறினார்.