தி மு க. தனது தேர்தல் அறிக்கையில் உயர் வகுப்பை சேர்ந்த ஒருவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு கலப்பு திருமண நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது என்று சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், இந்த பதிவு தொடர்பாக தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆர்.எஸ். பாரதி மற்றும் என்.ஆர். இளங்கோ ஆகியோர் தேர்தல் ஆணையரிடத்தில் புகாரளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துகொள்ளும் உயர் சாதி வகுப்பினருக்கு சமுதாயத்தில் அங்கீகாரம் அளிப்பதற்காகவும் அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் சமூக நலத்துறை அமைச்சகத்துடன் இணைந்து அவர்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் அளிக்கப்படுகிறது.
தி.மு.க. ஆட்சி காலத்தில், அஞ்சுகம் அம்மையார் பெயரில் செயல்பட்டு வந்த இந்த திட்டத்தை, அ.தி.மு.க. அரசு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெயரில் மாற்றி செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தை மீண்டும் அஞ்சுகம் அம்மையார் பெயரில் மாற்றுவதுடன் நிதி உதவியை 50,000 ரூபாயில் இருந்து 60,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதுமட்டுமல்ல, இந்த திட்டம் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களான குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
https://twitter.com/Mahesh10816/status/1372843020526133250
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பா.ஜ.க. கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்ட உறுப்பினரான மகேஷ் என்பவர் தனது வலைதளத்தில் தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து விஷம பிரச்சாரம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது.
2016 – 17 ம் நிதி ஆண்டு முதல் மத்திய அரசின் சமூக நலத்துறை மூலம் இந்த நிதி உதவி திட்டம் நேரடியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதற்கு முன் அந்தந்த மாநில அரசின் நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப ரூ. 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை உதவி தொகை வழங்க பட்டு வந்தது.
தற்போது, பல்வேறு மாநிலங்களில் இந்த உதவி தொகை ரூ. 2.5 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே பா.ஜ.க. வின் மாநில தலைவர் எல். முருகன் கலப்பு திருமண ஊக்கத்தொகை ரூ. 2.5 லட்சமாக உயர்த்தி வழங்க வகை செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
மாநில தலைவர் இவ்வாறு அறிவித்திருந்த நிலையில், அவரது கட்சியை சேர்ந்த உறுப்பினர் ஒருவர், தி.மு.க. வினர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் விஷம பிரச்சாரம் மேற்கொண்ட செயல் சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் 2017 ம் ஆண்டு முதல் 2.5 லட்சம் ரூபாய் உதவி தொகை வழங்கி வரும் வேளையில் இதனை மறைக்க அ.தி.மு.க.வின் தோழமை கட்சியான பா.ஜ.க. இதுபோன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்கள் மேற்கொண்டு வருவதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தி.மு.க. வினரின் புகாரை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் விஷம பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.