ஜலந்தர்: மோடி அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மக்களவைத் தொகுதியில், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த விவசாயிகளே கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் என்பது கவனத்தைக் கவர்ந்துள்ளது.

அத்தொகுதியில், கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற சோம் பிரகாஷ், தற்போது மத்திய இணை அமைச்சராக இருக்கிறார்.

கடந்த 110 நாட்களாக, வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வருகிறார்கள் இங்குள்ள விவசாயிகள். இவர்களில் பெரும்பான்மையோர் தீவிர பாஜக ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“தாங்கள் பாஜகவுக்காக எதையும் செய்யத் தயார்தான். அதற்காக, இந்த மோசமான சட்டங்களை எந்தவகையிலும் ஏற்கவே முடியாது. நாங்களெல்லாம் விவசாயிகள். எப்படி எங்களால் இதுபோன்ற சட்டங்களைப் பொறுத்துக்கொள்ள முடியும்” என்கின்றனர் அவர்கள்.

எங்களின் போராட்டம், சட்டங்கள் வாபஸ் பெறப்படும் வரை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.