அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், மாநில  முதல்வராக  மாணிக் சாஹா இன்று பதவி ஏற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

 60 தொகுதிகளைக் கொண்ட திரிபுராவில் கடந்த பிப்ரவரிஎ மாதம் 16-ஆம் தேதி பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில், 38.97 சதவீத வாக்குகளுடன் பாஜக 32 இடங்களிலும், கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஓரிடத்திலும் வென்றன. தனிப் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக மாணிக் சாஹா மீண்டும் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

இதையடுத்து, இன்று பதவி ஏற்பு விழா நடைபெற்றது. திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சுவாமி விவேகானந்தா மைதானத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. முதல்வராக மாணிக் சாஹாவுக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநா் சத்யதேவ் நாராயண் ஆா்யா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலமை, திரிபுரா மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து இரண்டாவது முறையாக மாணிக் சாஹா இன்று பதவியேற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.