சோனிபட்: ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி கிரிக்கெட் விளையாடி உள்ளது பெரும் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது. 3 கட்ட ஊரடங்கு அமல்படுத்திய பிறகு கொரோனா கட்டுக்குள் வரவில்லை.
இப்போது 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகளை அறிவித்துள்ளன. 5ம் கட்டமாக ஊரடங்கு தொடரும் என்றும் தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இந் நிலையில் அரியானாவில் ஊரடங்கு விதிகளை மீறி டெல்லி பாஜக தலைவர் கிரிக்கெட் விளையாடியது பெரும் சர்ச்சையில் கொண்டுபோய் விட்டுள்ளது.
அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ஷேக்புரா நகரில் உள்ள கிரிக்கெட் அகாடெமியில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. அதில், பாஜகவை எம்பியும், அக்கட்சியின் டெல்லி பாஜக தலைவரும் மனோஜ் திவாரி கலந்து கொண்டு கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்.
ஊரடங்கு காலத்தில், சமூக இடைவெளி மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மீறி அவர் செயல்பட்டதாக சர்ச்சை வெடித்துள்ளது. இதையடுத்து பாஜக தலைவர் மனோஜ் திவாரி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறி இருப்பதாவது: நான் எப்போதும் சமூக விலகல், லாக்டவுன் விதிமுறைகளை பின்பற்றி வருகிறேன். பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கங்களை திறக்க உள்துறை அமைச்சகம் அனுமதித்தது. அதன் அடிப்படையில் நான் அங்கு சென்று விளையாடினேன். அனைத்து விதிமுறைகளும் பின்பற்றப்பட்டன என்று கூறி இருக்கிறார்.