புதுடெல்லி: 
பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR) அறிக்கையின்படி, 2019-20 ஆம் ஆண்டில் பாஜக கட்சியின் மொத்த வருமானம் 3,623.28 கோடியாக இருந்தது. அந்தக் காலகட்டத்தில் கட்சி ரூ .1,651.022 கோடி அல்லது 45.57 சதவீதம் மட்டுமே செலவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் ரூ .682.21 கோடியை நன்கொடையாகப் பெற்றுள்ளது.  இது பாஜகவைக் காட்டிலும் ஐந்து மடங்கு குறைவு.  ஆனால் 998.158 கோடி செலவழித்து அதன் செலவுகளைக் குறைத்தது.
2018-19 மற்றும் 2019-20 இடையே பாஜகவின் வருமானம் 50 சதவிகிதம் அல்லது ரூ .1,213.20 கோடியாக  ரூ. 2,410.08 கோடியிலிருந்து ரூ. 3,623.28 கோடியாக உயர்ந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், கொரோனா தடுப்பூசிகள் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரம் ஆகிய பிரச்சினைகளில் மோடி அரசைத் தொடர்ந்து ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார்.
இது குறித்துக் கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், பணவீக்கத்தால் பெரும்பான்மையான இந்தியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பின் (ADR) அறிக்கை குறித்து  அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கடந்த 2019-20 ஆண்டில் பாஜகவுக்கு ரூ. 3, 628 கோடி வருமானம் கிடைத்துள்ளது.  மேலும் பாஜக,  பாஜகவின் வருமானம் 50% உயர்ந்தாலும் மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா?  என்று கேள்வியைப் பதிவிட்டுள்ளார்.