சூரத்
ஜி எஸ் டிக்கு எதிராக போராட்டம் நடத்தும் பா ஜ க வணிகர் தலைவர் காங்கிரசில் இணைவதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் ஜவுளி வியாபாரத்தின் முன்னோடி நகரங்களில் ஒன்றாகும். இங்கு கடந்த ஜூலை மாதம் ஜி எஸ் டியை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டம் ஜவுளி வியாபாரிகளால் நிகழ்த்தப்பட்டது. இந்த போராட்டத்தை நடத்தியது ஜி எஸ் டி எதிர்ப்பு அமைப்பான ஜி எஸ் டி சங்கர்ஷ் சமிதி ஆகும். இதன் தலைவர் தாராசந்த் கேசட் பா ஜ கவின் உறுப்பினர் ஆவார். இவர் ஜவுளிகளுக்கு ஜி எஸ் டி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரி இந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார்.
இவருடைய போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆளும் பா ஜ க அரசு செவிசாய்க்காதது இவருக்கு வருத்தத்தை உண்டாக்கியது. ஆயினும் அவர் பா ஜ க வில் உறுப்பினராக தொடர்ந்து வந்தார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் தாராசந்தை சந்தித்தனர். சந்திப்பின் போது வியாபாரிகளை அமைதிப்படுத்துமாறும் போராட்டத்தை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். ஆனால் அவர் அதை ஒப்புக் கொள்ளவில்லை.
போராட்டம் நடந்து மூன்று மாதஙகளாகியும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாததால் தாராசந்த் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி பா ஜ கவில் இருந்து நீங்கி விட்டதாக அறிவித்தார். தாராசந்த், ”வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி அன்று நான் ராஜிவ் காந்தி சூரத்தில் பேரணி நடத்தும் போது காங்கிரசில் இணையப் போகிறேன். வணிகர்கள் நிறைந்த மஜுரா தொகுதியில் போட்டியிட நான் வாய்ப்புக் கேட்டுள்ளேன். வணிகர்கள் அனைவரும் தற்போது காங்கிரஸ் கட்சியின் பின்னால் தான் உள்ளனர். ஆளும் பா ஜ கவுக்கு இந்த தேர்தல் ஒரு நல்ல பாடம் புகட்டும்” என தெரிவித்துள்ளார்.