இலங்கையின் வடகிழக்கு பகுதியான மன்னாரில் 500 மெ.வா. திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்காக மார்ச் மாதம் அதானி குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து இலங்கையில் புது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக கடந்த வாரம் இலங்கை நாடாளுமன்ற கூட்டுக் குழு மேற்கொண்ட விசாரணைக்கு ஆஜரான சிலோன் மின்சார வாரிய தலைவர் எம்.எம்.சி. பெர்டினாண்டோ, “எந்தவித நடைமுறையும் இல்லாமல் அதானி நிறுவனத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று இந்திய பிரதமர் மோடி விரும்புவதாக அதிபர் ராஜபக்சே கூறியதை அடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டது” என்று தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து “மின் உற்பத்தி நிலைய அனுமதிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறினார்.

இதனைத் தொடர்ந்து பெர்டினாண்டோ, “உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பொய் பேசியதாக” தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணையில் பா.ஜ.க. பின்னணியில் செயல்படும் அதானிக்கு எந்த விதியையும் பின்பற்றாமல் மின் திட்டம் ஒன்றுக்கு அனுமதி வழங்கி இருப்பதாக கூறியிருப்பது “பா.ஜ.க.வின் துதி இப்போது கடல் கடந்து இலங்கைக்கும் சென்றுள்ளதையே குறிக்கிறது” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது இலங்கையில் அந்த நாடே திவால் ஆகும் நிலையில் உள்ளதாக அந்நாட்டு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது இத்தனை சோதனைகளுக்கு நடுவே அம்பானியைக் கடந்து அதானி நிறுவனம் பன்மடங்கு வளர்ச்சி அடைந்து வருவது எப்படி என்ற கேள்விக்கு இலங்கை விவகாரமே எடுத்துக்காட்ட உள்ளது என்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.