காந்திநகர்:
குஜராத் முதல்-வர் கூட்டத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த செயலைத் தொடர்ந்து பா.ஜ.க. அரசின் அராஜகம் உச்சக்கட்ட நிலையில் இருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் கேவதியா காலனியில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் விஜய் ரூபானி கலந்து கொண்டார். அவர் மேடையை நோக்கி சென்ற போது மக்கள் கூட்டத்தில் இருந்த ஒரு பெண் அவரை நோக்கி நடந்து சென்றார். நான் அவரை சந்திக்க வேண்டும் என்று கத்திக்கொண்டே வந்தார். போலீசார் அந்தப் பெண்ணை பிடித்து இழுத்துச் சென்றனர்.
இதனை பார்த்த விஜய் ரூபானி கூட்டம் முடிந்தவுடன் அந்த பெண்ணை சந்திப்பதாக மேடையில் அறிவித்தார். ஆனால் விஜய் அந்த பெண்ணை சந்திக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த பெண் மறைந்த ராணுவ வீரர் அசோக் டாட்வியின் மகள் ரூபாள் டாட்வி என்பது தெரியவந்தது. தனது தந்தை மரணத்திற்கு பிறகு அரசு கொடுப்பதாக அறிவித்த நிலத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதனால் முதல்-மந்திரியிடம் புகார் செய்யவே சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்த வீடியோவை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், ‘‘பா.ஜ.க. அரசின் அராஜகம் எல்லை தாண்டி சென்று கொண்டிருக்கிறது. மனித நேயம் சிறிதும் இல்லாமல் விஜய் ரூபானி கூட்டத்தில் இருந்த பெண்ணை சந்திக்காமல் சென்றுள்ளார். அவருக்கு பல ஆண்டுகளாக நியாயம் மறுக்கப்பட்டுள்ளது. அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தி விமர்சனம் செய்த சிறிது நேரத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணிக் குடும்பத்திற்கு தேவையான நலத்திட்ட உதவிகளை உடனடியாக வழங்கும்படி முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.