மும்பை:  பிரதமர் மோடியின்  400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என  பாஜகவின் கூட்டணி கட்சி யான சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதலமைச்சரும்  ஏக்நாத் ஷிண்டே  நேரடியாக  குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலானசிவசேனா பெரும் வெற்றி பெற்றது. ஆட்சியில் உள்ள ஷிண்டே தலைமையிலான சிவசேனா சில தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி உள்ளது. மக்களவைத் தேர்தலில் மகாராஷ்ராவில் பாஜக 9 இடங்களையும், ஷிண்டே அணி 7 இடங்களையும், அஜித் பவார் அணி 1 இடத்தையும் கைப்பற்றியது. இந்தியா கூட்டணி 30 இடங்களை கைப்பற்றியது. இதன் காரணமாக, அந்த கட்சிக்கு மத்திய அமைச்சரவையில் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே மோதல் போக்குநிலவி வருகிறது.

இந்த நிலையில், பாஜகவினரின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என முதலமைச்சரும், சிவசேனா கட்சியின் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே , எங்களுக்கு எதிராக தவறான கதைகள் அமைக்கப்பட்டதால் சில இடங்களில் நஷ்டம் ஏற்பட்டது.  பிரதமர் மோடி மற்றும் பாஜகவினரின் 400 பார்’ கோஷத்தால், மக்கள் எங்கள் மீது சந்தேகம் மற்றும் பொய்யை நம்ப ஆரம்பித்தனர்.  “எதிர்க்கட்சியினரின் தவறான பிரசாரத்தால் சில தொகுதிகளை நாங்கள் இழந்தோம். மகாராஷ்ராவில் எங்கள் கூட்டணி பாதிப்பை சந்தித்தது. 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்தது, மக்களிடையே அரசியலமைப்பு சட்டத்தை மாற்றப் போகிறார்கள் என்றும் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றும் அச்சம் நிலவியது” எனத் தெரிவித்தார்.

பின்னர்  ஆந்திரா சென்று முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்ட ஷிண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது,  “இது ஒரு வரலாற்று  சிறப்பு மிக்க நாள். சந்திரபாபு நாயுடு நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்றதால் மாநில மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பிரதமர் மோடி. , யூனியன் ஹோம் மினிஸ்டர்  மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த   பதவியேற்பு விழா சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நரேந்திர மோடியை நாட்டின் பிரதமராக்க சந்திரபாபு நாயுடுவும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளார். அவருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

முன்னதாக மத்திய அமைச்சரவையில் 7 மக்களவை உறுப்பினர்களை கொண்ட சிவசேனைக்கு கேபினேட் பதவி வழங்காமல், ஒரு எம்பியை கொண்ட கட்சிக்கெல்லாம் கேபினேட் பதவி கொடுத்துள்ளதாக ஷிண்டே அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து… வீடியோ